Published : 13 Mar 2021 04:54 PM
Last Updated : 13 Mar 2021 04:54 PM

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை எங்களுக்கு வழங்குவார்கள்: முதல்வர் பழனிசாமி

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

சேலம்

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை எங்களுக்கு வழங்குவார்கள் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 13) சேலம் மாவட்டம், ஓமலூரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

வேட்பாளர் பட்டியல் முதல் கதாநாயகன், தேர்தல் அறிக்கை இரண்டாவது கதாநாயகன் என திமுக தலைவர் கூறியிள்ளாரே?

நாங்கள் தான் முதன்முதலாக வெளியிட்டோம். தேர்தல் அறிக்கையாக அல்ல மக்கள் என்ன எண்ணுகிறார்களோ அதை தேர்தல் வருவதற்கு முன்பே நடைமுறைப்படுத்திய அரசாங்கம் அதிமுக அரசாங்கம், அதிமுக கட்சி. விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர்கடன் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை அறிவித்து உடன் அமல்படுத்திய கட்சி அதிமுக கட்சி, அதிமுக அரசாங்கம்.

தேர்தலுக்காக அல்ல, வறட்சி, புயல், வெள்ளம் போன்றவற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர் கடன் ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு சங்கங்கள் வலியுறுத்தின, நானும் புயல் வந்த போது பல்வேறு மாவட்டங்களை பார்வையிட்ட போது விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அந்த அடிப்படையிலே அவர்கள் வாங்கிய பயிர்கடன் ரத்து செய்யப்பட்டது.

பெரும்பாலான கருத்துக் கணிப்பில் திமுக வெற்றிபெறும் என்று தொடர்ந்து செய்தியை வெளியிட்டு வருகிறார்கள்.

விக்கிரவாண்டியிலும், நாங்குநேரியிலும். எவ்வளவு வக்குவித்தியாசத்தில் ஜெயித்தோம். 2016-ல் திமுக ஜெயித்த தொகுதி விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி. அதேபோல, நாங்குநேரியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த இரண்டு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றோம். அப்போது எல்லா பத்திரிகையிலும் இப்படித்தான் எழுதிக்கொண்டிருந்தார்கள். அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு கிடையாது என்று, பத்திரிகையில் வந்த செய்தி பொய்ச் செய்தி என்று முறியடிக்கின்ற விதமாக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் விக்கிரவாண்டியில் 46 ஆயிரம் வாக்கு வித்தியாசத்திலும், நாங்குநேரியில் 34 ஆயிரம் வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற இயக்கம், அதிமுக இயக்கம்.

தமிழகத்தில் பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதிமுகவின் நிலைப்பாடு என்ன?

அதிமுக தேர்தல் அறிவிப்பினை பாருங்கள். அவர்களது அறிவிப்பை முழுமையாக பார்த்த பின்னர் தான் கருத்து வெளியிட முடியும்.

தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களை கைப்பற்றும்?

அதிமுக பெரும்பான்மையான இடத்தினை கைப்பற்றும். திமுக 200 தொகுதியை கைப்பற்றும் என்றால், அவர் என்ன ஜோசியமா வைத்துள்ளார். மக்கள் தான் வாக்களிக்கின்றார்கள். மக்கள் அளிப்பதுதான் இறுதியான தீர்ப்பு. மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு. ஆகவே, மக்கள் தான் நீதிபதிகள். இந்த தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை எங்களுக்கு வழங்குவார்கள் என்று நாங்கள் எண்ணுகிறோம்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x