Published : 12 Mar 2021 10:45 PM
Last Updated : 12 Mar 2021 10:45 PM

அமமுக தேர்தல் அறிக்கை : வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கும் திட்டம் 

அமமுக தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிட்டார், அதில் முக்கிய திட்டமாக கிராமபுற தொழிலை வளர்ப்பது, முதலீட்டாளர்களாக மாற்றி கிராம மக்களை நகரத்தை நோக்கி செல்லாமல் கிராமத்திலேயே வேலை வாய்ப்பை உருவாக்கும் அம்மா பொருளாதார புரட்சித் திட்டம் என்ற ஒன்றை அறிவித்துள்ளார்.

அமமுக தேர்தல் அறிக்கையில் வழக்கமான பல அம்சங்கள் இருந்தாலும் மற்ற கட்சிகள் அணுகாத இந்த திட்டம் சிந்திக்க வேண்டிய ஒன்று, இத்திட்டம் குறித்த அமமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“ அரசின் நேரடிப் பார்வையில் கிராமப்புறங்களிலும், பேரூர்களிலும் பல்வேறு வகையான தொழிலகங்களை உருவாக்கி, அதன் வழியாக வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். புரட்சிகரமான இந்தத் திட்டம் ‘அம்மா பொருளாதார புரட்சித் திட்டம்’ என்ற பெயரில் அழைக்கப்படும்.

விவசாயம், தொழில் இரண்டையும் உள்ளடக்கிய நவீன தற்சார்பு பொருளாதாரத்தின் அடிப்படையில் அந்தந்தப் பகுதியில் கிடைக்கிற மூலப்பொருட்களைக் கொண்டு ஒருங்கிணைந்த தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

அந்தந்த பகுதியில் இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். தேவைப்பட்டால், அருகிலுள்ள ஊர்களில் உள்ளவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படும். இதில் பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதம் அளிக்கப்படுவதுடன், அவர்கள் பணியாற்றும் தொழிலகத்தின் பங்குதாரராகவும் ஆக்கப்படுவார்கள்.

அந்தந்தப் பகுதிகளில் உற்பத்தியாகும் பொருட்கள், அதற்கு பங்களிப்பவர்களுக்கு நியாயமான விலையில் வழங்கப்படும். இதன்மூலம் தரமான பொருளை, வெளிச்சந்தையைவிடக் குறைவான விலையில் அவர்களால் பெற முடியும். ஒவ்வொரு ஊரிலும் தனித்தனி தொழிலகங்களாக செயல்படும் அவற்றை எல்லாம் மாவட்டவாரியாக ஒருங்கிணைத்து, அங்கே தயாராகும் பொருட்களை மற்ற மாவட்டங்களில் விற்பனை செய்யும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.

ஒட்டுமொத்தமாக மாநில அளவிலான தேவை நிறைவடைந்த பிறகு, வெளிமாநிலங்களுக்கு அனுப்பவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் வாய்ப்புகளும் உருவாக்கப்படும்.

அம்மா பொருளாதார புரட்சித்திட்டத்தைச் செயல்படுத்த மாநில அளவில் தனித் துறை உருவாக்கப்படும். அரசின் பிற துறைகளில் இருக்கிற மனித வளம், உட்கட்டமைப்பு, நிதி ஆதாரம் உள்ளிட்டவை தேவைப்படும் இடங்களில் முழுமையாகவோ, பகுதியளவிலோ இதற்குப் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

மூன்றாண்டுகளில் லாபம் ஈட்டும் தொழில் அமைப்புகளாக இவை உருமாற்றப்படும்போது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுவதுடன், இந்தியாவுக்கே முன்மாதிரி திட்டமாகவும் திகழும்.

கிராமங்களில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி, கிராமப்புற மக்கள் நகரத்தை நோக்கி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படாதவாறு அவர்களுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்பையும், பொருளாதார தன்னிறைவையும் அளிக்கப்போகும் இந்த ‘அம்மா பொருளாதார புரட்சித் திட்டம்’ கழக அரசின் லட்சியத்திட்டமாக செயல்படுத்தப்படும்”.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x