Published : 12 Mar 2021 03:12 AM
Last Updated : 12 Mar 2021 03:12 AM

சென்னை, கோவை, சேலம் உட்பட தமிழகத்தில் 20 நகரங்களில் வருமான வரித் துறை சோதனை: பணப் பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் சென்னை, கோவை, சேலம் உட்பட 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி, கணக்கில் வராத பணத்தை கண்டுபிடிக்கவும், தேர்தலின்போது அந்த பணத்தை பயன்படுத்துவதை தடுக்கவும், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளை கண்காணிக்கவும் வருமான வரித் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, தமிழகம், புதுச்சேரி வருமான வரித் துறை மண்டலத்தின் புலனாய்வு பிரிவு இயக்குநரகம் சார்பில், இலவச தொலைபேசி எண்களுடன், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைஅமைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம், பரிசுப் பொருட்களை யாராவது எடுத்துச் சென்றாலோ, பதுக்கி வைத்தாலோ கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் புகார் கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வருமான வரி கட்டுப்பாட்டு அறைக்கு தேர்தல் தொடர்பான புகார் வந்ததை அடுத்து, பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் நேற்று சோதனைநடத்தியுள்ளனர். இதுகுறித்து வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

அரசியல் கட்சியினர் பணம், பரிசுப் பொருட்களை லஞ்சமாக கொடுத்து வாக்காளர்களை கவர்ந்துவிடக் கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது. இந்த நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுக்க ஏற்பாடுகள் நடப்பதாக, வருமான வரித் துறை கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது.

சோதனை தொடரும்

இதையடுத்து, சென்னை, கோவை, சேலம் உட்பட தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட நகரங்களில், தனி நபர்களுக்கு சொந்தமான பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 50-க்கும்மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.

சோதனையில் பணம், பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்த விவரங்களை தற்போது வெளியிட இயலாது. தொடர்ந்து சோதனை நடக்கும். பணம், பரிசுப் பொருட்கள் பதுக்கல், விநியோகம் தொடர்பாக புகார் கொடுப்பவர்கள் பற்றிய விவரம் ரகசியமாக வைக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x