Published : 29 Nov 2015 11:00 AM
Last Updated : 29 Nov 2015 11:00 AM

தொலைநோக்கு திட்டம்-2023 என்ன ஆனது? வெள்ளை அறிக்கை விடத் தயாரா?: ஜெயலலிதாவுக்கு ராம்தாஸ் சவால்

இலக்குகளை எட்ட நடவடிக்கைகள் எடுக்காமல், தமிழகம் முன்னேற்றப்பாதையில் செல்வதாகக் கூறி பொது மக்களை முட்டாள்களாக்க ஜெயலலிதா தலைமையிலான அரசு முயல்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் சாடியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றுவதற்கான தொலைநோக்குத் திட்டம் (விஷன்)&2023 வெளியிடப்பட்டு 45 மாதங்கள் நிறைவடைந்து விட்டன. ஆனால், தொலைநோக்குத் திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான முதல் அடியைக் கூட தமிழக அரசு எடுத்து வைக்கவில்லை. வெற்று அறிவிப்புகளின் மூலம் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற தமிழக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

ஒளிமயமான தமிழகத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்கப் போவதாக கூறி தொலைநோக்குத் திட்டம்&2023 என்ற வளர்ச்சித் திட்ட அறிக்கையை 22.03.2012 அன்று வெளியிட்டார். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வறுமையே இருக்காது; வளமையும், செழுமையும் பொங்கி வழியும் என்றெல்லாம் ஜெயலலிதா முழக்கமிட்டார். இந்த வெற்று அறிவிப்புகளை எல்லாம் தமிழக மக்கள் மறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையோ என்னவோ இவற்றையெல்லாம் ஜெயலலிதா மறந்து விட்டார். இந்த திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள பணிகள் குறித்த இரண்டாம் கட்ட அறிக்கையை 22.02.2014 அன்று வெளியிட்டதைத் தவிர இதுவரை வேறு எந்த நடவடிக்கையையும் ஜெயலலிதா மேற்கொள்ளவில்லை.

அதனால், தொலைநோக்குத் திட்டம் &2023 இலக்குகளை எட்டுவதில் சிறிய முன்னேற்றம் கூட ஏற்படவில்லை. உதாரணமாக...

* தமிழ்நாடு அடுத்த 11 ஆண்டுகளுக்கு தலா 11% வளர்ச்சியை எட்டும். 2023 ஆம் ஆண்டில் தமிழகத்தின் தனிநபர் வருவாய் ரூ.6.50 லட்சமாக இருக்கும் என்று தொலைநோக்குத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் சராசரி வளர்ச்சி 5 விழுக்காட்டைக் கூட தாண்டவில்லை. அதேபோல், தனிநபர் வருமானம் நடப்பாண்டு இறுதிக்குள் ரூ.2.16 லட்சமாக உயர்ந்திருக்க வேண்டும். ஆனால், அதில் பாதியான ரூ. 1 லட்சத்தைக் கூட தாண்டவில்லை.

* எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும் வகையில் அனைவருக்கும் பயனுள்ள வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால், 2012 ஆம் ஆண்டில் 73 லட்சமாக இருந்த வேலையில்லாத இளைஞர்கள் எண்ணிக்கை இப்போது 86 லட்சமாக அதிகரித்திருக்கிறது.

* குழந்தைகள் இறப்பு விகிதம், தாய்மார்கள் இறப்பு விகிதம் உள்ளிட்ட சுகாதாரக் குறியீடுகள் சிறப்பாக மேம்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த குறியீடுகளில் குறிப்பிடத்தக்க அளவில் எந்த முன்னேற்றமும் இல்லை. மாறாக தருமபுரி, விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொத்துக்கொத்தாக குழந்தைகள் இறந்த கொடுமை நடந்தது.

* மின்சாரம், போக்குவரத்து, கல்வி, பாசனம், துறைமுகம், விமானநிலையம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.15 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி 4 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ரூ.6 ஆயிரம் கோடி கூட முதலீடு செய்யப்படவில்லை. இதனால் உட்கட்டமைப்பு வசதிகளில் தமிழகம் இந்தியாவில் 17&ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

* ஆரோக்கியமான முதலீட்டு சூழல் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு வந்ததாக கூறப்பட்ட போதிலும் ஒரு தொழிற்சாலைக்கு கூட இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை.

*கல்விக்கும், ஆராய்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, தமிழகம் அறிவுசார் மையமாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகள் ஏலத்தில் விடப்படும் அவலம் தான் ஏற்பட்டிருக்கிறது.

* மனித வளத்தை மேம்படுத்துவதற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப் பட்டது. ஆனால், பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது என்ற அளவுக்குத் தான் மனித வளம் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

* பாரம்பரிய கட்டிடக் கலையும், சூழலியலும் பாதுகாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

* இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது பாதிப்புகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாக்குறுதி எந்தளவுக்கு காப்பாற்றப் பட்டது என்பதற்கு கடலூர், சென்னை மாவட்டங்களில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் தான் சாட்சி.

*அரசு நிர்வாக அமைப்புகள் மேம்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை. மாறாக ஆளுங்கட்சி ஆதரவாளர்களை நியமித்து தகவல் ஆணையம் முடக்கப்பட்டிருக்கிறது. லோக் அயுக்தா, பொது சேவை பெறும் உரிமைச் சட்டம் ஆகியவற்றை கொண்டு வர முடியாது என தமிழக அரசே திட்டவட்டமாக அறிவித்து விட்டது.

தொலைநோக்குத் திட்டம் &2023ல் 10 வகையான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. அவற்றை 2023 ஆம் ஆண்டிற்குள் எட்ட வேண்டும் என்பது தான் தொலைநோக்குத் திட்டத்தின் நோக்கமாகும். ஆனால், திட்டம் அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இலக்குகளை எட்டுவதில் கண்ணுக்குத் தெரிந்த முன்னேற்றம் எட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இலக்குகளை எட்ட நடவடிக்கைகள் எடுக்காமல், தமிழகம் முன்னேற்றப்பாதையில் செல்வதாகக் கூறி பொது மக்களை முட்டாள்களாக்க ஜெயலலிதா தலைமையிலான அரசு முயல்கிறது.

இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. நான்காண்டு ஆட்சி... நாலாபுற வளர்ச்சி என்று கூறும் தமிழக அரசு, தொலைநோக்குத் திட்டம் &2023 இலக்குகளை எட்டுவதற்காக கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? என்பதை சவாலாகவே முன்வைக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x