Last Updated : 06 Nov, 2015 03:08 PM

 

Published : 06 Nov 2015 03:08 PM
Last Updated : 06 Nov 2015 03:08 PM

தமிழ் எழுத்துக்களுடன் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த ‘புலி குத்திக் கல்’: திருப்பூர் அருகே கண்டெடுப்பு

திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அரிய வகை ‘புலி குத்திக் கல்’ கண்டுடெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சாலையில் உள்ள கொடுவாய் கிராமத்தில் புலியுடன் சண்டையிட்டு வீர மரணமடைந்த வீரனின் நினைவைப் போற்றக்கூடிய ‘புலி குத்திக் கல்’ (நடுகல்) உள்ளது. இக் கல்வெட்டு குறித்து, திருப்பூரில் உள்ள வீர ராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த சு.வேலுச்சாமி, க.பொன்னுசாமி, சு.சதாசிவம், பொறியாளர் சு.ரவிக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து ஆய்வு மைய இயக்குநர் சு.ரவிக்குமார் கூறியதாவது:

மாட்டு மந்தையைக் காப்பாற்ற புலியுடன் சண்டையிட்டு வீர மரணமடைந்த வீரனின் நினைவாகவும், வீரத்தின் அடையாளமாகவும் இறந்த ஒரு வீரனின் தாயாரால் இந் நடுகல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வரலாற்றில் வீரர்கள் எல்லா நாடுகளிலும் போற்றப்பட்டுள்ளனர். இன்றும் போற்றப்பட்டு வருகின்றனர். சங்க காலத்தில் வீரர்களுக்கிருந்த பெருமைகளைச் சங்கப் பாடல்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடியும். தொல்காப்பியத்தில் புறத்திணையியலில் நடுகற்கள் குறித்த செய்திகள் உள்ளன.

அந்த வகையில் கொடுவாயில் காணப்படும் நடுகல் 100 செ.மீ அகலமும், 120 செ.மீ உயரமும் கொண்டதாகும். இதன் மேற்பகுதியில் மூன்று வரிகளைக் கொண்ட தமிழ் எழுத்துச் செய்தி உள்ளது. இதில் வீரனின் தலை நேராகப் புலியைப் பார்த்த வண்ணம் உள்ளது. காதில் காதணியும், கழுத்தில் சரப்பளி என்னும் ஆபரணமும் கையில் வீர காப்பும் இடையில் மட்டும் நல்ல வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடையும் அணிந்துள்ளார். இடையில் குறு வாள் வைத்துள்ளார். தன் இரண்டு கைகளிலும் ஈட்டியைப் பிடித்துப் புலியின் வயிற்றுப் பகுதியில் குத்தும் நிலையில் வீரக்கல் வடிவமைக்கப்பட்டுள்ளது. புலியின் முன்னங்கால் இரண்டும் எழுந்த நிலையில் வீரனை தாக்கவும், ஈட்டியைத் தடுக்கும் நிலையில் உள்ளது. பின்னங்கால் வீரனின் இடது கால் மேல் உள்ளது. புலியின் வால் மேல் நோக்கி உள்ளது.

“கொடுவாயில் முத்து (ப்) புவன வாணராயன் மகன் முத்தனுக்குத் தாய் வெட்டுவித்த கல்“ என்று அக் கல்வெட்டில் தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது, கொடுவாயில் உள்ள முத்து புவன வாணராயன் மகன் முத்தன் என்பவர் மாட்டு மந்தையைக் காப்பற்ற புலியுடன் சண்டையிட்டு வீர மரணமடைந்துள்ளார். அவரின் நினைவாகவும், வீரத்தின் அடையாளமாகவும் அவனது தாய் ஏற்படுத்திய நடுகல் என்பது அதன் பொருளாகும். தன் மகனுக்கு தாய் ஏற்படுத்திய வீரக்கல் என்பதால் இது மிகச் சிறப்புடையதாகும் என்றார்.

இது குறித்துத் தொல்லியல் துறையின் முன்னாள் துணை இயக்குநர் முனைவர் ர.பூங்குன்றன் கூறியதாவது:

கொங்கு மண்டலத்தில் பல புலி குத்திக் கற்கள் காணப்பட்டாலும் பெரும் பகுதி நடுகற்கள் எழுத்துப் பொறிப்பு இல்லாமலே உள்ளன. அந்த வகையில் கொடுவாயில் தமிழ் எழுத்துக்களுடன் கூடிய நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது சிறப்புடையது.

இது சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கி.பி.13-ம் நூற்றாண்டில் இவை ஏற்படுத்தப்பட்டிருக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x