Published : 11 Mar 2021 11:00 AM
Last Updated : 11 Mar 2021 11:00 AM

மதுரவாயலுக்கு போட்டிப்போடும் மார்க்சிஸ்ட், காங்கிரஸ், திமுக: ஆர்.கே.நகர், வேளச்சேரியை தள்ளிவிட திமுக முடிவு?

சென்னை

திமுக கூட்டணியில் சென்னையில் வெல்ல வாய்ப்பில்லாத தொகுதிகளை கூட்டணிக்கட்சிகளுக்கு திமுக ஒதுக்குகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இதில் முதலிடத்தில் ஆர்.கே.நகர், வேளச்சேரி தொகுதிகள் வருகின்றன.

திமுக கூட்டணியில் கூட்டணிக்கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு இழுபறியாக நீடித்த நிலையில் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. காங்கிரஸ் கட்சியுடன் நீண்ட இழுபறிக்குப்பின் 25 தொகுதிகளை ஒதுக்க திமுக ஒப்புக்கொண்டது. இடதுசாரிகள், விசிக, மதிமுகவுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இதில் சென்னையில் போட்டியிட அதிமுகவில் உள்ள பல கட்சிகளும் தயக்கம் காட்டுகின்றன. ஆனால் திமுகவே 2 தொகுதியில் போட்டியிட தயக்கம் காட்டுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒரு தொகுதி வேளச்சேரி, மற்றொன்று ஆர்.கே.நகர் தொகுதி ஆகும். ஆர்.கே.நகரை காங்கிரஸுக்கு திமுக ஒதுக்குவதாக தெரிவித்தது.

பின்னர் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாததால் அத்தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட திமுக ஒதுக்கியுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் மதுசூதனன் ஆதரவாளர் ராஜேஷ் நிறுத்தப்பட்டுள்ளார். டிடிவி தினகரன் போட்டியிடவும் வாய்ப்புள்ளதால் அங்கு திமுக நிற்க தயங்குகிறது. ஆகவே கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் அங்கு போட்டியிடும் என தெரிகிறது.

இதேப்போன்று வேளச்சேரி தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ வாகை சந்திரசேகர் சரியாக செயல்படாததால் அத்தொகுதியில் வெற்றி வாய்ப்பில்லை என திமுகவுக்கு ரிப்போர்ட் வந்துள்ளதால் திமுக அதை காங்கிரஸுக்கு ஒதுக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அதிமுக சார்பில் 2011 சட்டப்பேரவை தேர்தலில் வென்ற அசோக் மீண்டும் போட்டியிடுகிறார். இவருக்காக ஓபிஎஸ் பேசி தொகுதியை வாங்கித்தந்ததாக கூறப்படுகிறது.

இதேப்போன்று மதுரவாயல் தொகுதியை காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கேட்டு நிற்கிறது. தாங்கள் ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால் அதை ஒதுக்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் திமுக அத்தொகுதியில் போட்டியிடும் என தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x