Published : 17 Nov 2015 01:33 PM
Last Updated : 17 Nov 2015 01:33 PM

சென்னையில் 50 தற்காலிக பண்ணை பசுமை கடைகள்: காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்த முதல்வர் நடவடிக்கை

காய்கறிகளின் விலைகளை கட்டுப்படுத்தும் வகையில், சென்னை நகரில் 50 கூடுதல் காய்கறி விற்பனை மையங்களை தற்காலிகமாக திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான செய்திக் குறிப்பில், “வெளிச் சந்தையில் அதிலும் குறிப்பாக நகர்ப்புறங்களில் காய்கறி விலைகளை கட்டுக்குள் வைத்திடவும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்திடவும், நுகர்வோர்களுக்கு நியாயமான நிலையில் தரமான காய்கறிகள் கிடைத்திடும் வகையிலும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் இயங்கி வருகின்றன.

கூட்டுறவு சங்கங்கள் கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நீலகிரி, விழுப்புரம், நாமக்கல் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் காய்கறி பயிரிடும் விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்து பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றன.

தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள 58 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதுவன்றி, இரண்டு நகரும் பண்ணை பசுமை கடைகள் சென்னை மாநகரில் செயல்பட்டு வருகின்றன.

பண்ணை பசுமை கடைகளில் இதுவரை சுமார் 33 கோடி ரூபாய் மதிப்பிலான 11,385 மெட்ரிக் டன் காய்கறிகள் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பெய்து வரும் கன மழையின் காரணமாக சென்னை நகருக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது.

எனவே, காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது. காய்கறிகளின் விலைகளை கட்டுப்படுத்தும் வகையில், சென்னை நகரில் 50 கூடுதல் காய்கறி விற்பனை மையங்களை தற்காலிகமாக திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, தற்போது சென்னை மாநகரில் செயல்பட்டு வரும் 42 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளுடன் தற்காலிகமாக கூடுதலாக 50 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் துவங்கப்படும்.

எனவே, சென்னை மாநகரில், 92 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் காய்கறிகள் விற்பனை செய்யப்படும். பொது மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் காய்கறிகளான வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், பீட்ரூட் மற்றும் புடலங்காய் ஆகிய காய்கறிகள் இந்தக் கடைகளில் விற்பனை செய்யப்படும்.

சென்னை நகரில் தற்காலிகமாக துவங்கப்படவுள்ள 50 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் விவரம் பின்வருமாறு:

துரைப்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் டீயூசிஸ் அங்காடிகள், தாடண்டன் நகர், சாஸ்திரி நகர், விருகம்பாக்கம், சின்மயா நகர், திருநகர் (வடபழனி), மன்னார் முதலியார் தெரு (வடபழனி), பேரூர்-காரப்பாக்கம், கணேஷ் நகர் (கிழக்கு தாம்பரம்), கௌரிவாக்கம் (கிழக்கு தாம்பரம்), சந்தோஷபுரம் (கிழக்கு தாம்பரம்), இராமகிருஷ்ணன் தெரு (மேற்கு தாம்பரம்), வசந்தம் காலனி (வில்லிவாக்கம்), திருமங்கலம் (அண்ணாநகர் மேற்கு), ஏ.கே.சாமி நகர் (அயனாவரம்), பி.பி. கார்டன் (அமைந்தகரை), கிருஷ்ணாபுரம் (அம்பத்தூர்), புரசைவாக்கம், மணலி, எத்ராஜ்சாமி தெரு (எருக்கன்சேரி), முத்தமிழ் நகர் (கொடுங்கையூர்), பஜனைகோயில் தெரு (எர்ணாவூர்), பாரதியார் தெரு (எர்ணாவூர்), பழைய வண்ணாரப்பேட்டை, ராயபுரம், அருணாசலேஸ்வரர் தெரு (புது வண்ணாரப்பேட்டை), பூண்டி தங்கம்மாள் தெரு (புது வண்ணாரப்பேட்டை), தண்டையார் நகர், சௌகார்பேட்டை, தண்டையார் பேட்டை, கும்மாளம்மன் கோயில் தெரு (தண்டையார் பேட்டை), ஐசிஎப் பேருந்து நிலையம், சைதாப்பேட்டை, நங்கநல்லூர், ஆதம்பாக்கம், மேற்கு மாம்பலம், ரங்கைய்யா கார்டன் தெரு (மைலாப்பூர்), கிழக்கு அபிராமபுரம் (மைலாப்பூர்) ஆகிய இடங்களில் உள்ள கூட்டுறவு நியாய விலைக் கடைகள் மற்றும் அண்ணா நகர் மேற்கு, அசோக் நகர், ஆர்.கே.மடம் சாலை, இந்திரா நகர், ஆழ்வார்பேட்டை, தாம்பரம், கே.கே.நகர் மேற்கு, ராயப்பேட்டை, திருவான்மியூர், ஆற்காடு சாலை, போரூர் ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பல்பொருள் அங்காடிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x