Published : 09 Mar 2021 03:12 AM
Last Updated : 09 Mar 2021 03:12 AM

கேரளாவில் இருந்து கோவைக்கு வர இன்று முதல் இ-பாஸ் கட்டாயம் : ‘கரோனா நெகடிவ்’ சான்றிதழும் அவசியம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மாவட்டத்தில் இதுவரை 56,127 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதில், 55,089 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 353 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 685 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று 48 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையை ஒட்டியுள்ள கேரளா மாநிலத்திலும் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவருவதால், மாவட்டத்தில் உள்ள 13 சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே தளர்த்தப்பட்டிருந்த இ-பாஸ் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்படுகின்றன.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கூறியதாவது: கேரளாவில் இருந்து கோவைக்குள் நுழைபவர்கள் கட்டாயம் இ-பாஸ் எடுத்திருக்க வேண்டும். கரோனா பரிசோதனைச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இ-பாஸ், கரோனாநெகடிவ் சான்றிதழ் இல்லா விட்டால், கட்டாயம் கோவைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

கேரளாவில் இருந்து தினமும் கோவைக்கு பணிக்காக வந்து செல்பவர்கள், பல்வேறு அலுவல் ரீதியாக, வணிக ரீதியாக வந்து செல்பவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். வாளையார், வேலந்தாவளம், பொள்ளாச்சியில் 2 இடங்கள், ஆனைமலை, ஆனை கட்டி, வால்பாறை உள்ளிட்ட கேரளஎல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, காவல் துறை, உள்ளாட்சித்துறையினர் இணைந்து கண்காணிப்புப் பணியை மேற்கொள்வர்.

கோவைக்கு வருபவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம்உடல் வெப்பநிலை பரிசோதிக்கப் படும். சோதனைச்சாவடியில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படாது.இந்த உத்தரவு இன்று (9-ம் தேதி) முதல் நடைமுறைக்கு வருகிறது. கேரளாவில் இருந்து ரயில் மூலம் வருபவர்களும் கண்காணிக்கப்படுவர். குறிப்பாக, மாநகராட்சிக்குட்பட்ட பீளமேடு, ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர், காளப்பட்டி, சவுரிபாளையம், கணபதி, சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கரோனாவால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

அதேசமயம், ஒரு வீட்டில் 3 பேர், 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 40 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது.தற்போது மாவட்டத்தில் 3 தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் உள்ளன. அதேபோல, மாவட்டத்தில் 4,427இடங்களில் வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்களிக்க வருபவர்களுக்கு கையுறை வழங்கப்படும். உடல் வெப்பத்திறனும் பரிசோதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x