Published : 08 Mar 2021 03:56 AM
Last Updated : 08 Mar 2021 03:56 AM

வேதாரண்யம் அருகே கடலில் மீன் பிடித்தபோது வலையில் சிக்கிய பாட்டிலில் இருந்த திரவத்தை குடித்த 3 மீனவர்கள் உயிரிழப்பு

வேதாரண்யம் அருகே கடலில்மீன் பிடித்தபோது வலையில் சிக்கிய பாட்டிலில் இருந்த திரவத்தை சாராயம் என நினைத்து குடித்த மீனவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் இருந்து, கடந்த 1-ம் தேதி மதியம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த ஜான் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், ஜான், செல்வேந்திரன், தோமஸ், அந்தோணி, வினோத்t, போஸ் ஆகிய 6 மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றனர். நேற்று முன்தினம் இரவு அவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, மீனவர்களின் வலையில் 3 லிட்டர் திரவத்துடன் ஒரு பாட்டில் சிக்கியது.

மயங்கிய நிலையில் இருந்தனர்

பின்னர், அந்தோணி, வினோத், போஸ் ஆகிய 3 பேரும், பாட்டிலில் இருந்த திரவத்தை சாராயம் என நினைத்து, படகில் இருந்த மற்றவர்களுக்கு தெரியாமல் குடித்துவிட்டு, தூங்கிவிட்டனர். தொடர்ந்து, நேற்று மீன்பிடித்து விட்டு கரை திரும்பியபோது, தூங்கிக் கொண்டிருந்தவர்களை ஜான்எழுப்பினார். அப்போது,அந்தோணி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. மேலும், வினோத், போஸ் ஆகிய இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர்.

உடனடியாக, படகை கரைக்கு கொண்டுவந்த மீனவர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் வினோத், போஸ் ஆகியோரை வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

பிரேத பரிசோதனையில் தெரியும்

இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரேத பரிசோதனைக்குப் பிறகுதான், அவர்கள் குடித்தது சாராயமா என்பது தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர். 3 மீனவர்கள் இறந்த சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x