Published : 08 Mar 2021 03:57 AM
Last Updated : 08 Mar 2021 03:57 AM

விடுமுறை நாளில் களைகட்டிய சென்னை புத்தகக் காட்சி- ஏராளமான புத்தகங்கள் விற்றுத் தீர்ந்தன; நாளையுடன் நிறைவடைகிறது

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 44-வது புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. விடுமுறை நாளான நேற்று புத்தகங்கள் வாங்க அரங்குகளில் அலைமோதிய மக்கள் கூட்டம். படம்: பு.க.பிரவீன்

சென்னை

சென்னை புத்தகக் காட்சி, விடுமுறை நாளான நேற்று களைகட்டியது. திருவிழா கூட்டம் போல் குடும்பம் குடும்பமாக மக்கள் குவிந்தனர். நாளையுடன் புத்தகக் காட்சி நிறைவடைவதால் இன்றும் நாளையும் கூட்டம் அதிகம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 44-வது சென்னை புத்தகக் காட்சி கடந்த பிப்ரவரி 24-ம் தேதி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தினமும் மாலையில் இலக்கிய நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள், ஆளுமைகளின் சிறப்புரை போன்றவை இடம்பெறுகின்றன. விடுமுறை நாளான நேற்று காலை 11 மணி முதலே கூட்டம் அலைமோதியது.

கல்கியின் `பொன்னியின் செல்வன்', சாண்டில்யனின் `கடல் புறா', பாலகுமாரன் நாவல்கள், தமிழருவி மணியன், சுகி.சிவம் ஆகியோரின் நூல்கள் கணிசமாக விற்பனையாகின. மேலும் வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகள் தொடர்பான புத்தகங்களையும் சுயமுன்னேற்ற நூல்களையும் இயர் புக்குகளையும் இளைஞர்கள் பலர் ஆர்வத்தோடு வாங்கினர்.

மேலும் தமிழ்க் கலாச்சாரம், தமிழின் தொன்மை பற்றிய புத்தகங்களுக்கும் அம்பேத்கர், பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் படைப்புகளுக்கும் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. அம்பேத்கரின் `சாதி ஒழிப்பு', `இந்தியாவில் சாதிகள்' ஆகிய நூல்களை இளைஞர்கள் அதிகம் வாங்கிச்செல்வதாக நீலம் பதிப்பகத்தின் உதயா தெரிவித்தார்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் அரங்கத்தின் மேலாளர் குமார் கூறும்போது, ``பொதுவாக ஆய்வு நூல்கள், இலக்கிய நூல்கள், பண்டைத் தமிழரின் நாகரீகம் தொடர்பான புத்தகங்களை இளைஞர்கள் விரும்பி வாங்குகிறார்கள்'' எனறார்.

புத்தகக் காட்சி தொடங்கிய நாள் முதல் இதுவரை 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுமார் 40 ஆயிரம் பேர் வந்ததாகவும் பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் தெரிவித்தார்.

இதனிடையே நேற்று மாலை நடந்த இலக்கிய நிகழ்ச்சிக்கு பேரிடர் மேலாண்மை ஆணையர் டி.ஜெகநாதன் தலைமை தாங்கினார். இதில், `ஒரு சொல்' என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாளர் சு.கி.சிவமும், `வாசிப்பின் சிறகுகள்' என்ற தலைப்பில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனும் சிறப்புரையாற்றினர்.

சென்னை புத்தகக் காட்சி நாளை (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x