Published : 07 Mar 2021 03:44 PM
Last Updated : 07 Mar 2021 03:44 PM

திமுக கூட்டணியில் காங்கிரஸ்; வலியுறுத்திய ப.சிதம்பரம்: வைகோவிடம் பாராட்டிய ஸ்டாலின்

சென்னை

திமுக அணியில்தான் காங்கிரஸ் நீடிக்க வேண்டும், மூன்றாவது அணி சாத்தியமல்ல. இது சட்டப்பேரவைத் தேர்தலாக மட்டுமே பார்க்கும் விஷயமல்ல என ப.சிதம்பரம் அழுத்தமாகப் பேசியது குறித்து வைகோவிடம் ஸ்டாலின் பாராட்டிப் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நீடிக்குமா என்கிற கேள்வி கடந்த சில நாட்களாகப் பரபரப்பான பேச்சாக இருந்தது. காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் நமக்கான எண்ணிக்கையை அளிக்காமல் மரியாதையாக நடத்தாமல் இருக்கும் கூட்டணியில் நாம் ஏன் நீடிக்க வேண்டும், நாம் வெளியேறலாம் என்கிற கருத்து இரண்டாம் கட்டத் தலைவர்களால் வைக்கப்பட்டது. பலரும் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து மூன்றாவது அணி அமைப்போம் என்று வலியுறுத்தினர்.

ஆனால், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி போன்றோர் மூன்றாவது அணி சாத்தியமல்ல, அதில் காங்கிரஸுக்கு நம்பிக்கை இல்லை எனக் கருத்து தெரிவித்திருந்தனர். மக்கள் நீதி மய்யம் பகிரங்கமாக காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் திமுக தரப்பில் காங்கிரஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுத் தனியாகப் பேச்சுவார்த்தையும் நடந்தது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தில் காங்கிரஸ் இணைந்து மூன்றாவது அணி அமைக்கும் என்கிற கருத்தும் பரவலாக எழுந்தது. திமுக அணியில்தான் காங்கிரஸ் நீடிக்க வேண்டும், எண்ணிக்கை கவுரவம் கருதி தவறான முடிவெடுத்து விடக்கூடாது என்பதில் மூத்த தலைவர்கள் உறுதியாக இருந்தனர். கர்நாடகாவில் கிடைத்த பாடத்தை நேரடியாகப் பார்த்த வீரப்ப மொய்லி போன்றவர்கள் தனியாக திமுக தலைவர்களிடம் பேசி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை காரைக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்திலும், பின்னர் செய்தியாளர்களிடமும் பேசிய ப.சிதம்பரம், மக்கள் நீதி மய்யத்தின் அழைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், காங்கிரஸ் கட்சியினருக்கும் அறிவுரை கூறும் வகையில், மூன்றாவது அணி தமிழகத்தில் சாத்தியமே இல்லை. கமல் போன்றவர்களுக்கும் இது பொருந்தும். திமுக அணியில் காங்கிரஸ் நீடிப்பது காங்கிரஸ் நலனுக்கு முக்கியம் என வலியுறுத்திப் பேசினார்.

இந்நிலையில் அவரது பேச்சு பரவலாக அனைவராலும் கவனிக்கப்பட்டது. அந்த நேரம் திமுக கூட்டணி இழுபறியில் இருந்த நேரம். நேற்று மாலை வரை இழுபறியாக இருந்த நிலையில் மதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் ஸ்டாலினைச் சந்தித்தார் வைகோ. அப்போது காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தை எப்படி உள்ளது என ஸ்டாலினிடம் வைகோ கேட்டதாகத் தெரிகிறது.

விரைவில் நல்லபடியாக முடிந்துவிடும். ப.சிதம்பரத்தின் பேச்சு எச்சரிக்கை மணியாக உள்ளது. சரியான நேரத்தில் சரியான அறிவுரையை அவர் அளித்துள்ளார். காங்கிரஸ் நமது கூட்டணியை விட்டுப் போகாது என்று பதிலளித்ததாகத் தெரிகிறது.

அதேபோன்று நேற்றிரவு பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிந்தது. காலையில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி என ஒப்பந்தம் ஏற்பட்டதால் காங்கிரஸ் தலைவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x