Published : 07 Mar 2021 03:16 AM
Last Updated : 07 Mar 2021 03:16 AM

பரமக்குடி (தனி) தொகுதியில் வெற்றியைத் தீர்மானிக்கும் வேட்பாளர்கள் யார்?

பரமக்குடி

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில் பரமக்குடி தான் ஒரே தனித் தொகுதி. இந்தத் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,54,381, இதில் 1,26,068 ஆண் வாக்காளர்கள், 1,28,298 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 15 உள்ளனர்.

இத்தொகுதியில் பரமக்குடி நகராட்சி, அபிராமம் பேரூராட்சி, நயினார்கோவில் ஊராட்சியில் 37 பஞ்சாயத்துகள், போகலூர் ஊராட்சியில் 26 பஞ்சாயத்துகள், பரமக்குடி ஊராட்சியில் 39 பஞ்சாயத்துகள், கமுதி ஊராட்சியில் 13 பஞ்சாயத்துகள் உள்ளன.

கமுதக்குடியில் மத்திய அரசின் ஸ்பின்னிங் மில், அச்சங்குளத்தில் கூட்டுறவு நூற்பாலை உள்ளது. பரமக்குடியில் 2 அரசு கலைக்கல்லூரிகள், அரசு ஐடிஐ, ஒரு தனியார் பொறியியல் கல்லூரி, தனியார் பாலிடெக்னிக் கல்லூரி, 2 தனியார் கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இத்தொகுதியில் விவசாயிகள், நெசவாளர், வணிகர்கள் பரவலாக உள்ளனர்.

பரமக்குடி தொகுதியில் பருத்தி, மிளகாய் அதிகளவில் பயிரிடப்படுவதால் பருத்தியைப் பிரித்தெடுக்கும் ஜின்னிங் மில், மிளகாயை அரைத்து பவுடர் தயாரிப்பது உள்ளிட்ட தொழிற்சாலைகளைத் தொடங்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

பரமக்குடி மற்றும் எமனேஸ்வரத்தில் அதிக ளவில் நெசவாளர்கள் வசிக்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகள், காட்டன் புடவைகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு அனுப்பப்படுகின்றன. பரமக்குடியில் நீண்ட அல்லுக்கூடம் அமைக்க வேண்டும் என்பது நெசவாளர்களின் கோரிக்கையாகும். தற்போது பரமக்குடியில் நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டு பேருந்துகள் புறவழிச் சாலையில் செல்வதால் புறவழிச் சாலையில் பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும். இதனால் நகர்ப்புறங்களில் போக்குவரத்து நெரிசல் குறையும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

இத்தொகுதியில் 1952-ம் ஆண்டு முதல் 2019 -ம் ஆணடு நடந்த இடைத்தேர்தல் வரை 16 முறை நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக 8 முறையும் , காங்கிரஸ் 3 முறை, திமுக 3 முறை, தமாகா ஒருமுறை, சுயேட்சை ஒருமுறை வெற்றி பெற்றுள்ளனர். 2016-ல் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.முத்தையா அமமுகவுக்குச் சென்றதால் 2019-ல் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்ட சதன்பிரபாகர் திமுக வேட்பாளரான சம்பத்குமாரை 14,032 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இத்தொகுதியில், கடந்த 2 ஆண்டுகளில் பெரிய அளவில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறவில்லை என்ற புகார் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பரமக்குடியில் பாதாளச் சாக்கடைப் பணிகளும் நிறைவேற்றப்படவில்லை.

தற்போது இந்தத் தொகுதியை கைப்பற்றுவதில் அதிமுக கூட்டணியில் கடும் போட்டி நிலவுகிறது. சிட்டிங் எம்எல்ஏ என்.சதன்பிரபாகர் மீண்டும் சீட் கேட்டு தலைமையிடம் காய் நகர்த்தி வருகிறார். பரமக்குடியில் 3 முறை எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருந்த மருத்துவர் எஸ்.சுந்தர்ராஜூம் சீட் பெற முயற்சிக்கிறார்.

அது போல கடந்த ராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில் நவாஸ்கனியிடம் தோல்வி அடைந்த நயினார் நாகேந்திரன் பரமக்குடி தொகுதியில் தான் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார். இதனால் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனை இங்கு நிறுத்த பாஜகவினர் விரும்புகின்றனர். மேலும் மாநில பட்டியல் அணித்தலைவர் பொன்.பாலகணபதியும் சீட் கேட்டுள்ளார். மேலும் 2 முறை எம்எல்ஏவாக இருந்த தமாகாவைச் சேர்ந்த ராம்பிரபுவும் இத்தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு முயற்சிக்கிறார்.

திமுகவில்...

திமுக தரப்பில் கடந்த இடைத்தேர்தலில் தோல்வியடைந்த சம்பத்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவரும், முன்னால் எம்.எல்.ஏவுமான திசைவீரன், மாவட்டப் பதிவாளராக இருந்து விருப்ப ஓய்வு பெற்ற எஸ்.பாலு என்பவரும் சீட் கேட்டு வருகின்றனர்.

இப்படி அனைத்துக் கட்சி பிரமுகர்களும் பரமக்குடியில் போட்டியிட விரும்புவதால் தேர்தல் களத்தில் முந்தப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x