Last Updated : 06 Mar, 2021 05:41 PM

 

Published : 06 Mar 2021 05:41 PM
Last Updated : 06 Mar 2021 05:41 PM

கன்னியாகுமரியில் மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன்; களம் எப்படி? போட்டி எப்படி?

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி எம்.பி.யாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காலமானார். இதையடுத்து அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுடன் சேர்த்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

கன்னியாகுமரி மக்களவை பாஜக வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். பொன்.ராதாகிருஷ்ணன் 2019-ம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாருக்கு எதிராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த 1991-ம் ஆண்டு முதல் முந்தைய நாகர்கோவில் மக்களவைத் தொகுதியிலும், அதன் பின்னர் தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு உருவாக்கப்பட்ட கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியிலும் தொடர்ந்து பாஜக சார்பில் போட்டியிட்டு வருகிறார்.

இதில் 1991-ம் ஆண்டு அவர் களமிறங்கிய முதல் தேர்தலில் நாகர்கோவில் மக்களவைத் தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று பாஜகவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

1999 மற்றும் 2014 மக்களவைத் தேர்தல்களில் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் இரண்டு முறை மத்திய அமைச்சரவையில் பதவி வகித்துள்ளார்.

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வசநந்தகுமார் 6,27,235 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜகாவின் பொன். ராதாகிருஷ்ணன் 3,67,302 வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார்.

2019 மக்களவைத் தேர்தல்- தொகுதி வாரியாக பெற்ற வாக்குகள்

வசந்தகுமார் - பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி 1,10,996 - 82,295
நாகர்கோவில் 84,924 - 74,500
குளச்சல் 1,06,850 - 60,072
பத்மநாபபுரம் 1,02,863 - 53,212
விளவங்கோடு 1,06,044 - 52,289
கிள்ளியூர் 1,12,950 - 42,230

---------------------------------------------------------------------------
மொத்தம் 6,24,627- 3,64,598
--------------------------------------------------------------------------

தமிழகத்தின் கடைக்கோடி நாடாளுமன்றத் தொகுதி இது. கேரளாவில் இருந்து பிரிந்து வந்த மாவட்டம் என்பதால் கேரளத் தொடர்புகள் அதிகம். தமிழகத்தின் மற்ற அரசியல் சூழ்நிலையில் இருந்து மாறுபட்டு கேரளாவைப் போன்ற சூழல் கொண்ட தொகுதி. மாநிலக் கட்சிகளை விட தேசியக் கட்சிகள் அதிகம் கோலோச்சும் பகுதி.

குறிப்பாக இந்தத் தொகுதியில் மதரீதியாக வாக்குகள் பிரியும். எனவே, நீண்ட காலமாகவே இந்தத் தொகுதியில் இருமுனைப் போட்டி என்பது கடுமையாக இருக்கும். இதனால் காங்கிரஸ், பாஜக நேரடியாக மோதும் தொகுதியாக பல தேர்தல்களாக இருந்து வருகிறது. இது மட்டுமின்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் செல்வாக்கு உள்ள தொகுதி இது.

முன்பு நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதியாக இருந்த இந்தத் தொகுதி, மறுசீரமைப்புக்குப் பிறகு கன்னியாகுமரி தொகுதியாக மாறியுள்ளது. பலமுறை காங்கிரஸ் வென்ற இந்தத் தொகுதியில் பாஜக இரண்டு முறையும், சிபிஎம் மற்றும் திமுக தலா ஒரு முறையும் வென்றுள்ளன.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே திமுக கூட்டணியில் மீண்டும் களமிறங்கும் எனத் தெரிகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக தவிர அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் பெரிய அளவில் வாக்குகளைப் பெறவில்லை.

எனவே, இந்த முறையும் இரு பெரும் கூட்டணியைத் தவிர பிற கட்சிகளின் வேட்பாளர்களுக்கு கன்னியாகுமரி தொகுதியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை. வழக்கமாக இருமுனைப் போட்டி நிலவும் கன்னியாகுமரி தொகுதியைப் பொறுத்தவரையில் ஒரு அணியின் வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுவிட்டார். காங்கிரஸ்- திமுக கூட்டணியின் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x