Published : 03 Nov 2015 07:59 AM
Last Updated : 03 Nov 2015 07:59 AM

மறைந்த உறவினர்கள், நண்பர்களின் கல்லறைகளில் சிறப்பு பிரார்த்தனை: கிறிஸ்தவர்கள் குடும்பம் குடும்பமாக அஞ்சலி

கல்லறை திருநாளையொட்டி இறந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கிறிஸ்தவர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர். குடும்பம் குடும்பமாக சென்று கல்லறை தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ம் தேதியை கிறிஸ்த வர்கள் அனைத்து ஆன்மாக்கள் தினமாக அனுசரிக்கிறார்கள். இது, கல்லறை திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. கல்லறை திருநாளையொட்டி, சென்னையில் கிறிஸ்தவர்கள் இறந்து போன தங்கள் உறவினர்க ளுக்கும், நண்பர்களுக்கும் அவர்களின் கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.

சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே உள்ள புனித பேட்ரிக் கல்லறை தோட்டம், செயின்ட் மேரீஸ் கல்லறை தோட்டம், காசிமேடு கல்லறை தோட்டம், கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டம், சாந்தோம் கியூபிள் ஐலேண்ட் கல்லறை தோட்டம் உள்ளிட்ட இடங்களில் கல்லறைகளை சுத்தம்செய்து மலர்களால் அலங்கரித்தனர். மெழுகுவர்த்தி ஏற்றி, இறந்த தங்கள் உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கல்லறை அருகில் குடும்பம் குடும்பமாக அமர்ந்தவாறு ஜெபம் செய்தனர்.

சென்னையில் உள்ள பெரிய கல்லறை தோட்டங்களில் ஒன்றான சென்ட்ரல் அருகேயுள்ள செயின்ட் பேட்ரிக் கல்லறை தோட்டத்தில் நேற்று காலை 8 மணி முதலே கிறிஸ்தவர்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர். அங்குள்ள அனைத்து கல்லறைகளும் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஒருசில கல்லறைகளில் இறந்தவர்கள் நினைவாக அவர்களுக்கு பிடித்த உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.

கல்லறை திருநாளையொட்டி பாதிரியார்கள் ராக், டேனியல், மெல்டஸ், ஜான்சன் ஆகியோர் தலைமையில் ஒரே நாளில் 5 சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப் பட்டதாகவும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து அஞ்சலி செலுத்தியதாகவும் செயின்ட் பேட்ரிக் கல்லறை தோட்டத்தின் கண்காணிப்பாளரும், பாடிகாட் வியாகுல மாதா அருட்தல பங்குத்தந்தையுமான பாதிரியார் இ.இர்வின் தெரிவித்தார்.

அனைத்து ஆன்மாக்கள் தினத்தை ஒட்டி சாந்தோம் கியூபிள் ஐலேண்ட் கல்லறை தோட்டத்தில் சென்னை மயிலை உயர் மறை மாவட்ட ஆர்ச் பிஷப் ஜார்ஜ் அந்தோணிசாமி நேற்று மாலை சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். இதில், பாதிரியார்கள், கன்னியாஸ்திரீகள் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x