Published : 01 Mar 2021 03:17 AM
Last Updated : 01 Mar 2021 03:17 AM

எல்லையில் சோதனைச் சாவடி அமைத்து தமிழக-கர்நாடக போலீஸார் தீவிர கண்காணிப்பு

சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழக- கர்நாடக மாநில எல்லையில் சோதனைச் சாவடி அமைத்து இரு மாநில போலீஸார் தனித்தனியாக தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி வாக்காளர் களுக்கு ரொக்கப்பணம், நகைகள், பரிசுப் பொருட்களை அரசியல் கட்சியினர் விநியோகிப்பதை தடுக்க சேலம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழு, தலா ஒரு வீடியோ கண்காணிப்புக் குழு என மொத்தம் 77 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தமிழக- கர்நாடக எல்லைப் பகுதியான மேட்டூர் அடுத்த கொளத்தூர் காரைக்காடு என்ற இடத்தில் சோதனைச் சாவடி அமைத்து போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக மேட்டூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன் கூறும்போது, ‘‘தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக எல்லைப் பகுதியில் சட்ட விரோத நடவடிக்கைகள் நடைபெறாமல் தடுக்க கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் போலீஸாரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தற்போது, அவர்களது எல்லையில், கர்நாடகா போலீஸாரும், தமிழக எல்லையில் தமிழக போலீஸாரும் சோதனைச் சாவடி அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்,’’ என்றார்.

ஈரோட்டில் வாகனத் தணிக்கை

ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படை, நிலை மற்றும் கண்காணிப்புக் குழுவினர் மூலம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகனத்தணிக்கை தொடங்கியுள்ளது. தமிழக – கர்நாடக எல்லைப் பகுதிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் பிரிவு டி.எஸ்.பி சண்முகம் கூறும்போது, ‘‘பறக்கும் படையில் ஒரு ஷிப்டுக்கு மூவர் என 8 தொகுதிக்கும் 24 போலீஸார் பணியாற்றுவார்கள்.

இதேபோல் நிலை மற்றும் கண்காணிப்புக் குழுவில் ஒரு ஷிப்டுக்கு 3 போலீஸார் என 24 பேர் பணியாற்றுவார்கள். இதற்காக முதற்கட்டமாக 144 போலீஸார் நேற்று முன்தினம் முதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தேதி நெருங்கும் போது பறக்கும் படை, நிலை மற்றும் கண்காணிப்புக் குழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்,’’ என்றார்.

தருமபுரியில் எஸ்பி ஆய்வு

தருமபுரி மாவட்டத்தில், தொப்பூர், ஏரியூர், காரிமங்கலம் அடுத்த கும்பார அள்ளி, தீர்த்தமலை, காடுசெட்டிப்பட்டி, ஒகேனக்கல், மஞ்சவாடி கணவாய் உள்ளிட்ட 9 இடங்களில் அமைக்கப் பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர், அரசின் இதர துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அனைத்து சோதனைச் சாவடிகளிலும் நேற்று காலை முதல் தீவிர சோதனை நடைமுறைக்கு வந்தது. ஒகேனக்கல் அருகே கர்நாடக மாநில எல்லையில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை வழியாக செல்லும் வாகனங்களில் இடம்பெற்றுள்ள கட்சிக் கொடிகள் போன்ற அடையாளங்களை அகற்றும் பணியையும் போலீஸார் மேற்கொண்டனர்.

சோதனைச் சாவடிகளின் செயல்பாடு குறித்து நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x