Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM

சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக சென்னை மாநகராட்சியில் ரூ.3,481 கோடியில் பட்ஜெட் தாக்கல்: ரூ.546 கோடி பற்றாக்குறை

சென்னை

சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக சென்னை மாநகராட்சியில் நேற்று முன்தினம் ரூ.3,481 கோடியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

ஆண்டுதோறும் தமிழக பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகு, சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மாநகராட்சி மன்றம் இருந்தபோது, ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சி மேயர், ஆணையர் ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சியின் நிலைக்குழு (நிதி) தலைவர், பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.

கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், இதுவரை உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. சென்னை மாநகராட்சிக்கு அதன் ஆணையர் கோ.பிரகாஷ், தனி அலுவலராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக, மாநகராட்சியின் நிதி ஆலோசகர் முன்னிலையில் தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டை, மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில், நிலைக்குழு(நிதி) தலைவராக, மாநகராட்சி துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) செயல்பட்டு தாக்கல் செய்து வருகிறார். தனி அதிகாரி (மாநகராட்சி ஆணையர்), மேயர் பொறுப்பில் இருந்து, பட்ஜெட்டை ஏற்றுக்கொள்கிறார்.

நேற்று முன்தினம் மாலை தமிழக தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவசர அவசரமாக சென்னை மாநகராட்சியின் 2021-22 நிதிஆண்டுக்கான பட்ஜெட் ரூ.3 ஆயிரத்து 481 கோடியில் தயாரித்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 2021-22 நிதி ஆண்டின் வருவாய் தலைப்பில் வரவு ரூ.2 ஆயிரத்து 935 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.3 ஆயிரத்து 481 கோடியாகவும் இருக்கும். இது ரூ.546 கோடி நிதி பாற்றாக்குறை கொண்ட பட்ஜெட் ஆகும். கடந்த ஆண்டு பட்ஜெட்டுடன் (திருத்திய மதிப்பீட்டின்படி ரூ.3,582 கோடி) ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ரூ.101 கோடி குறைவு.

சொத்து வரி ரூ.600 கோடி

வருவாய் இனங்களில் முதன்மையான பங்கு வகிப்பது சொத்து வரி. 2021-2022 நிதி ஆண்டில், இது ரூ.600 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் வரி வருவாய் ரூ.500 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பணியாளர் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துக்கான செலவு ரூ.1,758 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிர்வாக செலவுகளுக்காக ரூ.124 கோடி, பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக ரூ.1,056 கோடி, கடனுக்கான வட்டி செலுத்துதலுக்காக ரூ.168 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் சாலை துறைக்கு ரூ.470 கோடி, மழைநீர் வடிகால் துறைக்கு ரூ.1,077 கோடி,பாலங்கள் துறைக்கு ரூ.260 கோடி, மின் துறைக்கு ரூ.150 கோடி, திடக்கழிவு மேலாண்மைத் துறைக்கு ரூ.134 கோடி, இயந்திர பொறியியல் துறைக்கு ரூ.52 கோடி, கட்டிடத் துறைக்கு ரூ.130 கோடி, கல்வித்துறைக்கு ரூ.4.20 கோடி, சுகாதாரத் துறைக்கு ரூ.1.70 கோடி என ஒதுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x