Published : 05 Nov 2015 03:45 PM
Last Updated : 05 Nov 2015 03:45 PM

வருமானச் சான்றிதழ் பிரச்சினை: அரசு திருமண உதவித்தொகை கிடைக்காமல் ஏமாற்றமடைந்த பட்டதாரி பெண்

‘தமிழக அரசு வழங்கும் திருமண உதவித் திட்டம் என்பது அதிகாரிகள் மனது வைத்தால்தான் சாத்தியமாகிறது. வருமானத்தை சரிவர விசாரிக்காமல் வருமானச் சான்றிதழ் கொடுத்ததால் எனது பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்து கடனாளியாகி தவிக்கிறேன்’ என்று ‘தி இந்து’ உங்கள் குரலில் வேதனை தெரிவித்தார் கோவை சூலூரை சேர்ந்த வாசகி சாந்தி துரைசாமி. அவரை சந்தித்துப் பேசினோம். அவர் கூறியதாவது:

எனக்கு 3 மகள்கள், ஒரு மகன். 10 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியிலிருந்து கோவை ராசிபாளையம் பகுதிக்கு குடிவந்தோம். அங்குள்ள பண்ணையத்தில் தோட்டத்து வேலை பார்த்தேன். 63 வயதான என் கணவர் தனியார் செக்யூரிட்டி பணிக்குச் சென்றுவந்தார்.

பெண் பிள்ளைகளில் இருவருக்கு திருமணமாகிவிட்டது. சில மாதங்களுக்கு முன்பு எனக்கு வேலையில்லாமல் போனதால், நானும், கணவரும், கடைசி மகளும், மகனும் சூலூரில் உள்ள 2-வது மகள் வீட்டில் இருந்து வருகிறோம்.

கடந்த ஜூன் 26-ம் தேதி 3-வது மகள் பொன்மலருக்கு (பட்டதாரி) திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு, அரசு திருமண உதவித்திட்டம் கை கொடுக்கும் என்று நம்பினோம்.

கணவருக்கு மாதம் ரூ. 5,800 சம்பளம் என சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கும் இசேவை மையத்தில் தெரிவித்தோம்.

செக்யூரிட்டி அலுவலக சம்பள சான்றிதழ் அவசியமில்லை என்று கூறியதால் வருட வருமானம் ரூ.72 ஆயிரம் எனக் குறிப்பிட்டு வருமானச் சான்றிதழுக்கு ஜூன் 8-ம் தேதி விண்ணப்பித்தோம்.

ஜூன் 13-ம் தேதி சான்றிதழ் வந்துவிட்டதாக எனது கைப்பேசிக்கு குறுந்தகவல் வந்தது. வருமானச் சான்றிதழை வாங்கிப் பார்த்தபோது வருட வருமானம் ரூ.84 ஆயிரம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ரூ.72 ஆயிரம் குடும்ப வருமானம் இருந்தால்தான் அரசு திருமண உதவித் திட்டத்தில் பயன் பெற முடியும் என்பதால், விண்ணப்பம் இசேவை மையத்திலேயே நிராகரிக்கப்பட்டது. இதனால், ஏமாற்றமடைந்தோம்.

எங்கள் கஷ்ட சூழ்நிலையை கூறியதும், உள்ளூர் விஏஓவை சந்திக்கச் சொன்னார்கள். கணவரது அலுவலக சம்பள சான்றிதழுடன் 2-வதாக ஒரு விண்ணப்பம் இசேவை மையத்திலேயே அளிக்கக் கூறினர். அப்படியே விண்ணப்பித்தோம். அதற்குள் திருமண நாள் வந்துவிட்டதால், அரசு திருமண உதவித்தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடன் வாங்கி திருமணத்தை முடித்தோம்.

அதற்கு பிறகு, ஜூலை 4-ம் தேதி இசேவை மையத்தில் 2-வது விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டதாக தகவல் வந்தது. ஒருவருக்கு வருடத்தில் ஒரு முறைதான் வருமானச் சான்றிதழ் தரமுடியும். எனவே 2-வது விண்ணப்பத்தை இசேவை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்தனர்.

முதல்வர் தனிப்பிரிவுக்கு விண்ணப்பித்தேன், பதில் வரவில்லை. ‘சிஎம் செல்’ தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டபோது, நடவடிக்கை எடுக்க கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு மனுவை அனுப்பியிருப்பதாகத் தெரிவித்தனர். ஆட்சியர் அலுவலகத்தில் கேட்டபோது, ‘குறிப்பிட்ட மனுவை சமூக நலத்துறை அலுவலகத்துக்கு’ அனுப்பிவிட்டதாகக் கூறினர்.

அந்த துறையை தொடர்பு கொண்டபோது, ‘வருமானச் சான்றிதழ் பொருந்தாததால் நிராகரிக்கப்பட்டது. மீண்டும் ஒரு வருடம் கழித்து வேறு வருமான சான்றிதழ் வாங்கினாலும் முந்தைய ஆண்டு திருமணம் நடந்த பெண்ணுக்கு உதவித்தொகை கிடைக்காது’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x