Published : 23 Feb 2021 12:50 pm

Updated : 23 Feb 2021 12:50 pm

 

Published : 23 Feb 2021 12:50 PM
Last Updated : 23 Feb 2021 12:50 PM

ரூ.5.70 லட்சம் கோடி கடன்; ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்படும்: ஸ்டாலின் எச்சரிக்கை

rs-5-70-lakh-crore-debt-everything-will-be-investigated-if-he-comes-to-power-stalin-warns

சென்னை

ரூ.5.70 லட்சம் கோடி கடன், பிறக்கும் குழந்தையின் தலையில் ரூ.62 ஆயிரம் கடன் சுமை, ஆட்சியாளர்கள் நிதி மேலாண்மையில் ஏற்படுத்தியுள்ள அனைத்து முறைகேடுகளையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்போம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:


''நாட்டு மக்களின் நலனை அறவே புறக்கணித்து, தொடர்ந்து முறைகேடுகள் செய்து, தம்மையும் தம்மைத் தாங்கிப் பிடிக்கும் பினாமிகளையும் மேலும் மேலும் வளப்படுத்திக் கொள்வதற்காகவே, கடன் வாங்கி, தமிழக மக்கள் தலையில் 5.70 லட்சம் கோடி ரூபாய் கடனைச் சுமத்தியுள்ள முதல்வர் பழனிசாமி மற்றும் நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு, திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆறாவது சம்பளக் கமிஷனை அமல்படுத்தி - பொருளாதார தேக்க நிலைமை இருந்த நிதியாண்டில் கூட, உபரி நிதிநிலை அறிக்கையை விட்டுச் சென்றது திமுக ஆட்சி. ஆனால், 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் - தொடர் வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை என்று எல்லா நிலைகளிலும், மிக மோசமானதொரு நிதி நிர்வாகத்தைக் கையாண்டு - வருமானத்திற்கு மீறிய சொத்துக்குவிப்புப் புகாருக்கு உள்ளாகியுள்ள நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், முதல்வர் பழனிசாமியும் தமிழக மக்களுக்கு, என்றும் எளிதில் நீங்காத மாபெரும் நிதிப் பேரிடரையும், நிதி நெருக்கடியையும் உருவாக்கி விட்டார்கள்.

2006 - 2011 வரையிலான திமுக ஆட்சியில் வாங்கிய கடன் வெறும் 44 ஆயிரத்து 84 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால், தற்போது அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்டுள்ள கடன் மட்டும் 3.55 லட்சம் கோடி. இது இறுதிக் கணக்கு வரும்போது இன்னும் அதிகரிக்கும். வருவாய் பற்றாக்குறையும், நிதி பற்றாக்குறையும் வரிந்து கட்டிக்கொண்டு உயர்ந்து நிற்கின்றன.

திமுக ஆட்சியில் 10.5 சதவீதமாக இருந்த வருமானம், அதிமுக ஆட்சியில் தற்போது 7.2 சதவீதமாகக் குறைந்துவிட்டது. அதாவது மூன்று ரூபாய் வருமானத்தில் ஒரு ரூபாய் காணாமல் போனதன் விளைவாக - 93,737 கோடி ரூபாய் வருமானம் சரிவு ஏற்பட்டுவிட்டது. கரோனா பேரிடருக்கு முன்பே - அதாவது 2018-ஆம் ஆண்டிலேயே 68 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் காணாமல் போய் - நிதி நிலைமை மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகிவிட்டது.

2003ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதி நிலை நிர்வாகப் பொறுப்புடைமைச் சட்டம் வந்த பிறகு தமிழக வரலாற்றில் கடனை வாங்கி கடனுக்கு வட்டி கட்டும் ஒரே அரசு அதிமுக அரசு. இதுவா வெற்றிநடை போடும் தமிழகம்? கடன் சுமையில் தள்ளாடும் தமிழகம் அல்லவா?

கரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து வாடிய ஏழை - எளிய, நடுத்தரப் பிரிவு மக்களுக்கு உயிர் வாழ்வதற்கு நேரடிப் பண உதவியை, பலமுறை மன்றாடிக் கேட்டும், வழங்கிட முன்வரவில்லை. நிவர் புயல் உள்ளிட்ட பேரிடர்களின்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கவில்லை. ஆனால் ஊழல் டெண்டர்களும் - கமிஷன் வசூலும் கடைசி வரை ஓயவில்லை.

தற்போது 1000 கோடி ரூபாய்க்கு மேல் மக்கள் பணத்தை எடுத்து, தண்ணீராக தாராளமாக வாரி இறைத்து, விளம்பரங்கள் வழங்குவதிலும் ஊழல் செய்து, தன்னை ஏதோ வாராது வந்த மாமணியைப் போல், தனிப்பட்ட முறையில் ஊதிப் பெருக்கி முன்னிறுத்திக் கொள்ள - தமிழகத்தின் நிதி ஆதாரத்தில் கை வைத்துள்ளார் முதல்வர் பழனிசாமி.

தேர்தலுக்கு முன் பணிகளை மேற்கொண்டு நிறைவேற்ற முடியாது என்று நன்கு அறிந்திருந்தும் கூட, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள டெண்டர்களை விடுத்து - அரசு கஜானாவை காலி செய்துள்ளார் முதல்வர். அதிமுக ஆட்சியில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் 78,854.25 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. 2011 முதல் 2017 வரையிலான ஆண்டுகளில் நிதி நிலை மிக மோசமானதன் விளைவாக 10.9 சதவீதமாக இருந்த தொழில் வளர்ச்சி 4.6 சதவீதமாக குறைந்து சரிந்துவிட்டது என்று அதிமுகவின் கூட்டணிக் கட்சியான மத்திய பாஜக அரசின் 15ஆவது நிதிக்குழுவின் அறிக்கையே சொல்கிறது.

பெட்ரோல் - டீசல் ஆகியவற்றின் மீது வரிகளை ஏற்றி - இன்றைய பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கும், விலைவாசி அதிகரிப்புக்கும் காரணமான முதலமைச்சர் பழனிசாமி - கரோனா நிதியிலும் ஊழல் செய்து - உயிர் காக்கும் நிதியில் கூட வேட்டை ஆடியிருக்கிறார்.

அதிமுக ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வரும் வருவாய்ப் பற்றாக்குறையால் கடன் அதிகரித்து வருகிறது. இன்றைக்கு தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் தலையிலும் - ஏன் பிறக்கும் குழந்தையின் தலையில் கூட, 62 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடனை அதிமுக அரசு சுமத்திவிட்டுச் செல்கிறது.

பெட்ரோல் - டீசல் மூலம் தமிழக அரசுக்குக் கிடைத்த 87 ஆயிரம் கோடி எங்கே போனது என்றே தெரியவில்லை? உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்கிய நிதி - ஜி.எஸ்.டி. வருவாய் வரி நிலுவைத் தொகை, நபார்டு நிதி, சர்வதேச நிதி நிறுவனங்கள் அளித்த நிதி அனைத்திலும் அமைச்சர்களும் - முதல்வரும் போட்டி போட்டுக் கொண்டு “கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன்” என்று வாரிச் சுருட்டி, அப்பாவி மக்களின் வயிற்றில் ஓங்கி அடித்து இருக்கிறார்கள்.

தமிழகத்தின் வளர்ச்சியை 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் சென்று விட்டார்கள். பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் - உருப்படியான உட்கட்டமைப்புத் திட்டம் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை.

வேலைவாய்ப்பும் இல்லை, தொழிற்சாலையும் இல்லை என்பதை விட - மூலதனச் செலவுகளுக்கே நிதி ஒதுக்காத மாநிலங்களின் பட்டியலில் கீழே விழுந்து கிடக்கும் நிலையைத் தமிழ்நாட்டிற்கு ஏற்படுத்தி - இந்திய அளவில் தமிழகத்தை தலைகுனிய வைத்து விட்டார்கள். கஜானாவை முற்றும் காலி செய்தும், இன்னும் இந்த இருவரின் கோரப்பசி அடங்கவில்லை. எந்தத் திட்டத்தில் எவ்வளவு ஊழல் செய்ய முடியும் என்று பேயாட்டம் ஆடுகிறார்கள்.

கரோனா காலத்தில் வாங்கும் கடன்களிலும் கமிஷன் அடிப்பதை பழனிசாமியும், அவர் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களும் - நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அமைச்சரவைப் பணி போல் செய்து - “கடைசி நேர டெண்டர்கள்” “கடைசி நேர கமிஷன்களுக்கு” தலையாய முக்கியத்துவம் கொடுத்து, முறைகேடுகளில் மூழ்கி இருக்கிறார்கள். தமிழக நிதி மேலாண்மை தறிகெட்டுப் போனதற்கு, இந்த இணைந்த ஊழல் கரங்கள்தான் காரணம்.

தமிழக நிதி மேலாண்மை வரலாற்றில் நிதியமைச்சராக இருக்கும் பன்னீர்செல்வமும், முதல்வர் பழனிசாமியும் - ஏன் அதிமுக ஆட்சியும் ஒரு அழிக்க முடியாத கரும்புள்ளியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். தமிழ்நாடு நிதி நிலை நிர்வாகப் பொறுப்புடைமைச் சட்டத்தின் கீழ் “நிதி நிலை அறிக்கையின் இலக்கு குறித்து” ஆறு மாதத்திற்குள் வைக்க வேண்டிய ஆய்வு அறிக்கையைக் கூட தாக்கல் செய்யாத, தனது அலுவல் பொறுப்பு உணராத ஒரே நிதியமைச்சர் - நாட்டில் நிதி மேலாண்மையில் தோற்றுப் போன மிக மோசமான ஒரு நிதியமைச்சர் என்றால் - அது ஓ.பன்னீர்செல்வமாகவே இருக்கும்.

இப்படியொரு நிதியமைச்சரை இதுவரை தமிழகம் கண்டதில்லை. அந்த அளவிற்கு ஒரு கேடுகெட்ட நிதி நிர்வாகத்தை அளித்துள்ள முதல்வரையும் இதுவரை தமிழகம் பார்த்ததில்லை. தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் கடனைச் சுமத்திவிட்டு - திமுக ஆட்சியில் இருந்ததை விட ஐந்து மடங்கு கடனை வாங்கி ஊழலில் திளைத்து சுகமான ஆட்சி நடத்தி - வெற்று அறிவிப்புகளைச் செய்தே காலம் கடத்தி, கடைசி நேரத்தில் காரியத்திற்கு ஆகாத கல்வெட்டுகளைத் திறந்து வைத்து, அனைத்துத் துறைகளிலும் படுதோல்வியடைந்த ஒரு அவல ஆட்சியைக் கொடுத்து விட்டுச் செல்வோரின் கடைசி நிதி நிலை அறிக்கை (இடைக்கால நிதி நிலை அறிக்கை) உரையையும் - கூட்டத் தொடரையும் திமுக புறக்கணிக்கிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக மக்களின் பேராதரவுடன், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் - “ஊழலுக்கு இணைந்த அதிமுகவின் இந்தக் கறைபடிந்த கரங்கள்” - ஒரு அரசின் செலவுகளில், கடனுக்கு வட்டி கட்டுவதே இரண்டாவது பெரிய செலவு என்ற அளவிற்கு நிதி மேலாண்மையில் ஏற்படுத்தியுள்ள அனைத்து முறைகேடுகளையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து - தமிழகத்தின் நிதி நிலைமை - தமிழக மக்களுக்காக - தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக - என்பதை உறுதிப்படுத்திடும் வகையில் வேகமாகச் சீரமைக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்!


Rs 5.70 lakh crore debtEverything will be investigatedComes to powerStalin warnsரூ.5.70 லட்சம் கோடி கடன்ஆட்சிக்கு வந்தால்அனைத்தும் விசாரணைஸ்டாலின்எச்சரிக்கை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x