Published : 06 Nov 2015 03:07 PM
Last Updated : 06 Nov 2015 03:07 PM

அதிமுக, திமுகவை ஆட்சி அமைக்க விடமாட்டோம்: விஜயகாந்த் உறுதி

“அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளையும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க உறுதியாக விடமாட்டோம்” என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார்.

ஈரோடு மாவட்டம், கோபியில் தேமுதிக சார்பில், ‘மக்களுக்காக மக்கள் பணி’ நிகழ்ச்சியில், 151 பேருக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.

தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பேசிய பின்பு,தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:

கடந்த காலங்களில் ஒரு தொகுதி கூட வெற்றி பெற முடியாத அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது போல நாங்களும் வெற்றி பெறுவோம். நீதிமன்றத்துக்கு மத்திய அரசு காவல்துறை பாதுகாப்பு தேவையில்லை என தமிழக அரசு சொல்கிறது.

தமிழக காவல்துறை மீது நம்பிக்கையில்லாததால் தான் முதல்வர் ஜெயலலிதா கருப்பு பூனை படை பாதுகாப்பை வைத்துள்ளார். அதையேதான் இப்போது நீதிமன்றங்களூம் சொல்கிறது. தமிழக அரசின் தவறுகளை நீதிமன்றங்கள் கண்டித்து வருகின்றன.

என்மீது அவதூறு வழக்குகளை போட்டு வருகின்றனர். அதை சந்திக்க தயாராக இருக்கிறேன். ஒவ்வொரு ஊருக்கும் வழக்கு சம்பந்தமாக செல்லும்போது அதை தேர்தல் கூட்டமாக நான் மாற்றி விடுவேன்.

அதிமுக பலம் வாய்ந்த கட்சி என்றால் கடந்த தேர்தலில் தனியாக போட்டியிட்டு இருக்கலாமே. எதற்காக 41 தொகுதிகளை எங்களுக்கு கொடுத்தார்கள். அதிமுக, திமுகவை மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க விடமாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளோம். திமுக தலைவர் கருணாநிதி தேமுதிக தங்களூடன் வந்து விடும் என்று ஆசைப்படுகிறார். அவர் வேண்டுமானால் இறங்கி எங்களோடு கூட்டணி அமைக்க வரட்டும்.

இவ்வாறு பேசினார்.

தேமுதிக எம்.எல்.ஏ வி.சி.சந்திரகுமார், மாவட்ட செயலாளர்கள் செந்தில்குமார் (வடக்கு), இமயம் சிவக்குமார் (தெற்கு), மாவட்ட அவைத்தலைவர் பொன் சேர்மன், பொருளாளர் டி.நமச்சிவாயம், துணைச் செயலாளர்கள் கோபால், ஏசையன், ரமேஷ், தங்கவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x