Published : 18 Feb 2021 03:17 AM
Last Updated : 18 Feb 2021 03:17 AM

தமிழக அரசின் நீர்பாசனத் திட்டங்களுக்காக நபார்டு வங்கி ரூ.2,978 கோடி கடன்

நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக தமிழக அரசுக்கு ரூ.2,978 கோடி கடன் உதவியை நபார்டு வங்கி வழங்கியுள்ளது.

நபார்டு வங்கியின் தலைவர் ஜி.ஆர்.சிந்தாலா, முதல்வர் பழனிசாமியை சந்தித்து, காவிரி டெல்டா பகுதியில் பல்வேறு வகையான நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும்நவீனமயமாக்கல் பணிகளுக்காக நபார்டு வங்கியின் ரூ.2,978 கோடிகடன் உதவிக்கான அனுமதிக்கடிதத்தை வழங்கினார்.

இத்திட்டங்கள் நிறைவேற்றப்படுவதன் மூலம், டெல்டா மாவட்டங்களின் 1 லட்சத்து 89 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பகுதி பயன்பெறும். இந்த நிதியும் சேர்த்து நடப்பு ஆண்டில் நபார்டு வங்கியின் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிகளின் மூலமாக தமிழகத்துக்கு ரூ.9,200 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது, விவசாய மற்றும் ஊரக மேம்பாட்டுக்காக தமிழக அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஜி.ஆர்.சிந்தாலா பாராட்டு தெரிவித்தார்.

மேலும், விவசாயிகளின் நலனுக்காக தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டுக் கொண்டதுடன், அவற்றுக்கு நபார்டு வங்கி நிதி உதவிசெய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். விவசாய நிலங்களில் சூரியத் தகடுகள் பொருத்தி,மின்சாரம் உற்பத்தி செய்து விவசாயிகள் வருவாயைப் பெருக்கலாம் என்றும், இணையசேவைகள் மூலமாக விவசாயத் துறையில் முன்னேற்றம் கொண்டு வரலாம் என்றும் தெரிவித்தார்.

தமிழக அரசின் திட்டங்களுக்கு உடனடி ஒப்புதல் அளித்து கடனுதவி வழங்கும் நபார்டின் துரிதமான பணியைப் பாராட்டிய முதல்வர், கடல் நீரில் இருந்து குடிநீர் தயாரித்தல், கடலோரப் பகுதிகளில் கடல்நீர் உட்புகுவதைத் தடுக்கும் நடவடிக்கைகள், ஒருங்கிணைந்த மீன்வள வளாகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கும் நிதி உதவி அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்த சந்திப்பின்போது, தலைமைச் செயலர் டாக்டர் ராஜீவ் ரஞ்சன், தமிழக அரசின் ஆலோசகர் கே.சண்முகம், கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.கிருஷ்ணன், நபார்டு வங்கியின் தலைமைப் பொதுமேலாளர் எஸ்.செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

நபார்டு வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x