Published : 17 Feb 2021 16:24 pm

Updated : 17 Feb 2021 16:24 pm

 

Published : 17 Feb 2021 04:24 PM
Last Updated : 17 Feb 2021 04:24 PM

நான் 'ஸ்ட்ரெய்ட் பார்வர்டு'தான்; தவறு நடந்துவிடக் கூடாது என எச்சரிக்கையாக இருப்பேன்: ஸ்டாலின் பேட்டி

i-m-straight-forward-stalin-interview
ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

நான் 'ஸ்ட்ரெய்ட் பார்வர்டு'தான். எதிலும் தவறு நடந்துவிடக் கூடாது என எச்சரிக்கையாக இருப்பேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.


சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை போன்ற தளங்களில் இயங்குவது மாறி தேர்தல் அரசியலுக்கான ஒரு கட்சியாக திமுக சுருங்கிவிட்டது என்று சொல்கிறார்களே?

சமூக நீதிக்கு ஆபத்து வருகின்ற பொழுதெல்லாம் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். தமிழுக்கு ஆபத்து ஏற்படுகின்ற சூழ்நிலை வரும்பொழுதெல்லாம் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆகவே, அடிப்படைக் கொள்கைகளிலிருந்து என்றைக்கும் திமுக பின்வாங்க வேண்டிய அவசியம் கிடையாது; பின்வாங்கவும் மாட்டோம்.

ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, திமுக அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களோடு மக்களாக இருக்கின்ற இயக்கம்தான்.

கட்சித் தொண்டர்களின் கருத்து, கிரவுண்ட் ரியாலிட்டியைத் தாண்டி, தொழில்நுட்பத்தைத் திமுக அதிகமாக நம்புகிறது என்று ஒரு கருத்து நிலவுகிறதே?

கட்சித் தொண்டர்களுக்கு, கட்சிக்கு உதவி செய்கிறார்களே தவிர, உபத்திரவம் செய்வதற்காக அல்ல. விஞ்ஞான ரீதியாக பல மாநில முதல்வர்கள் செயல்படுகிறார்கள். அதில் ஒன்றும் தவறு கிடையாது.

2016இல் முதன்மை முழக்கமாக இருந்தது பூரண மதுவிலக்கு. கருணாநிதியும் நீங்களும் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்; இப்போதும் அதே நிலைப்பாட்டில் இருக்கிறீர்களா?

அதுபற்றியெல்லாம் கலந்து பேசி, வருகின்ற தேர்தல் அறிக்கையில் விரிவான விளக்கம் சொல்வோம்.

முதல்வராகப் பதவியேற்றவுடன் முதல் கையெழுத்து விவசாயக் கடன் தள்ளுபடிதான் என்று சொன்னீர்கள். அதை இப்பொழுது எடப்பாடி பழனிசாமி செய்துவிட்டார். மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவி யேற்றால், அவருடைய முதல் கையெழுத்து என்னவாக இருக்கும்?

முதல் கையெழுத்து மக்களுக்குப் பயன்படக் கூடிய வகையில் நிச்சயமாக இருக்கும்.

நானே ஒரு விவசாயி, ஸ்டாலினைவிட, எனக்கு விவசாயிகள் நலன்பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் என்கிறாரே, முதல்வர்?

தெரிந்திருக்கலாம், நான் ஏற்றுக்கொள்கிறேன். அந்த விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் முதல்வராக இருக்கிறார். அவர் இப்பொழுது நாடகமாடிக் கொண்டிருக்கிறார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

நான், அறிவித்துவிட்டேன். அப்படி அறிவித்த பிறகு, மக்களிடம் அந்தச் செய்தி சென்றடைந்துவிட்டது. அதனை மறைக்க வேண்டும்; தடுக்கவேண்டும்; அதிலிருந்து மக்களை மாற்றவேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு, இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.

தொடர்ந்து தமிழக அரசு, பொங்கல் பரிசுத் தொகை, விவசாயிகள் கடன் தள்ளுபடி, மும்முனை மின்சாரம் போன்ற நிறைய திட்டங்களை முதல்வர் அறிவித்துக் கொண்டே இருக்கிறார். முதல்வர் அறிவித்த நலத்திட்டங்கள் மூலமாக, மக்களிடம் அவருக்கு ஒரு ஆதரவு உருவாகாதா?

கடந்த 10 ஆண்டுகளாக இந்த ஆட்சியில், தமிழகம் அதல பாதாளத்திற்குச் சென்றுவிட்டது என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். இவர்கள் தாங்கள் அடித்த கொள்ளையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கிறார்களே தவிர, தமிழ்நாட்டுக்கு ஏதாவது சலுகைகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார்களா?

நீட் பிரச்சினையாகட்டும், விவசாயிகளின் பிரச்சினையாகட்டும், மற்ற எந்தப் பிரச்சினையை எடுத்துக்கொண்டாலும், தமிழ்நாட்டுக்கு எந்தவிதமான நன்மையையும் செய்யவில்லை இவர்கள்.

மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வாங்கிக் கொடுத்திருக்கிறோம்; நாங்கள் அறிவித்த திட்டங்களுக்காகப் போராடுகிறோம், குரல் கொடுக்கிறோம் என்கிறார்களே?

அனுமதி வாங்கியிருக்கிறார்கள், மருத்துவக் கல்லூரிகளை கட்டி முடித்து விட்டார்களா?

எய்ம்ஸ் மருத்துவமனை வருகிறது என்று நாடாளுமன்றத்தில் எப்பொழுது அறிவித்தார்கள்? நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இதே பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்றார். அதற்குப் பிறகு ஒரு செங்கல்கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை.

13 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இருந்ததே? அப்பொழுது அவர்கள் என்ன தமிழகத்திற்கு நன்மை செய்துவிட்டார்கள் என்று முதல்வர் கேட்கிறாரே?

நான் ஒரு பெரிய பட்டியலையே சட்டப்பேரவையிலும் சொன்னேன்; மக்கள் மன்றத்திலும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். மத்தியில் ஆட்சியில் கூட்டணியில் இருந்தபொழுது, அதனைப் பயன்படுத்தி தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதியைக் கொண்டு வந்தோம்.

சேது சமுத்திரத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி, விழா நடத்தினோம். ஆனால், இப்பொழுது இருக்கின்ற மத்திய ஆட்சி அதற்குத் தடை போட்டு நிறுத்தி வைத்திருக்கிறது.

மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தைக் கொண்டுவந்தோம்; அதற்கும் அதிமுக அரசு முட்டுக்கட்டை போட்டு இருக்கிறது.

கடல்சார் பல்கலைக்கழகம் கொண்டுவந்தோம். இப்படிப் பல திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். அந்தப் பட்டியலைச் சொன்னால் ஒரு மணி நேரம் ஆகும். அந்தப் பட்டியலை எடுத்துப் பார்க்கச் சொல்லுங்கள்.

கருணாநிதியிடம் நீங்கள் கடுமையாக முரண்பட்டு நின்ற விஷயம் எது?

எனக்குத் தெரிந்தவரையில், எதுவும் இல்லை. அவர் என்ன சொல்கிறாரோ, அதனை அப்படியே கேட்டு நடந்தவர்கள்தான் நாங்கள்.

திரையுலகத்தில் உங்கள் பங்களிப்பை அளித்திருக்கிறீர்கள்; சில படங்களில் நடித்திருக்கிறீர்கள்; அதனை ஏன் உங்களால் தொடர முடியவில்லை?

அண்ணாவும், கருணாநிதியும் திரையுலகத்தில் தங்களுடைய சாதனைகளைப் பெரிதாகப் படைத்திருக்கிறார்கள். அவர்கள் கலையுலகத்தை எப்படிப் பயன்படுத்தினார்கள் என்றால், மக்களிடம் பிரச்சாரங்களைக் கொண்டு செல்ல வேண்டும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே அண்ணாவும், கலைஞரும் திரையுலகத்தைப் பயன்படுத்தினார்கள்.

அதேபோல், என்னுடைய அரசியல் வாழ்க்கையில் நானும் ஒரு பிரச்சார நாடகத்தைத்தான் முதன்முதலில் நடத்தினேன். ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவதைவிட, முகத்தில் மேக்கப் போட்டுக்கொண்டு நாடகம் போட்டால், மக்களின் மனதில் எளிதாகப் பதியும். திரைப்படம் என்றால், இன்னும் மிகவும் எளிதாக மக்களின் மனதில் பதியும். அதுபோன்றுதான் இன்றைக்கு மக்களுடைய மனநிலை இருக்கிறது.

ஆகவே, அந்த முயற்சியில்தான் நானும் ஈடுபட்டேன். 'ஒரே ரத்தம்' என்ற திரைப்படத்தில் நடித்தேன். நந்தகுமார் என்ற பெயரில், அம்பேத்கருடைய வரலாற்றில் இடம்பெற்றது போல, ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் வண்டியில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் அமர்ந்துவிட்டார் என்பதற்காக, அந்த வண்டியையே குடை சாய்த்து விடுவார்கள்.

அதுபோன்ற கேரக்டரில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. கருணாநிதி எழுதிய 'ஒரே ரத்தம்' சினிமா அது. அந்தத் திரைப்படத்தில் நான் நடித்தேன்.

பிறகு 'மக்கள் ஆணையிட்டால்' என்ற திரைப்படம், ராம.நாராயணனுடைய சொந்தப் படம். அந்தத் திரைப்படத்தில் கருணாநிதி ஒரு பாட்டு எழுதியிருப்பார். 'ஆற அமர கொஞ்சம் யோசித்துப் பாரு… நீ அடுத்து வரும் தலைமுறையை சிந்தித்துப் பாரு' என்ற பாடலுக்கு நான் நடித்தேன். அந்தத் திரைப்படத்தின் கதாநாயகன் விஜயகாந்த். அதற்குப் பிறகு சின்னத்திரையில் 'சூர்யா' என்ற சீரியலில் நடித்தேன்.

நான் சிறையில் இருக்கும்பொழுது, பார்த்தசாரதி எழுதியது, 'குறிஞ்சிமலர் புத்தகம்'. அந்த புத்தகத்தைப் படித்து நான் அதிலேயே ஐக்கியமாகிவிட்டேன்.

அரவிந்தன், பூர்ணிமா என்ற கேரக்டர்கள் மிகவும் முக்கியமானவை. அதை நாடகமாக எடுக்க வேண்டும் என்று நான் மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தேன். என்னுடைய நண்பர் ஒருவர் 'சீரியல் எடுக்கப் போகிறேன். நடிக்கிறீர்களா?" என்று கேட்டார். அதைக் கேட்டதும் எனக்கு மிகவும் ஆச்சரியமாகப் போய்விட்டது. அந்த சீரியல், தூர்தர்ஷனில் வெள்ளிக்கிழமை தோறும் தொடர்ந்து 13 வாரம் ஒளிபரப்பானது.

மற்றொரு தொலைக்காட்சியில் செல்வா டைரக்‌ஷனில் 'சூர்யா' ஒளிபரப்பானது.

சி.வி.ராஜேந்திரன், குறிஞ்சி மலர் சீரியலுக்கு இயக்குநர். நீங்கள் நடிக்கக் கூடாது; இயல்பாக இருப்பதுபோன்றே நீங்கள் இருங்கள் என்றார். அதுபோன்றே செய்தேன். எனக்கு மிகவும் பிடித்த கேரக்டர் அது. நேற்றுகூட ஒரு குழந்தைக்குப் பெயர் வைக்கச் சொன்னார்கள், 'அரவிந்தன்' என்றுதான் பெயர் வைத்தேன்.

ஸ்டாலின் 'ஸ்ட்ரெய்ட் பார்வர்டு' மிகவும் கடுமையானவர் என்ற ஒரு தோற்றம் இருக்கிறதே. உண்மையாக ஸ்டாலின் எப்படி?

என்னிடம் பழகுவதற்கு முன்பு எல்லோரும் இப்படித்தான் சொல்கிறார்கள்; பழகியதற்குப் பிறகு நீங்கள் இப்படியா? நம்பவே முடியில்லையே என்று எல்லோரும் சொல்வார்கள். முதலில் சொன்னதை மாற்றிக் கொள்வார்கள்.

பொதுவாக நான் 'ஸ்ட்ரெய்ட் பார்வர்டு'தான். எதிலும் தவறு நடந்துவிடக் கூடாது. ஏனென்றால், ஒரு பொறுப்பில் நான் இருக்கிறேன். தலைவர் கருணாநிதியின் மகனாக அரசியலுக்கு வந்ததால், எதையும் மிகவும் எச்சரிக்கையாகத்தான் செய்வேன்.

அதனால் எனக்கு மட்டுமல்ல, தலைவருக்கும் கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக எதையும் யோசனை செய்துதான் நான் செய்வேன். அது எனக்குப் பழகிப் போய்விட்டது.

கருணாநிதி எதையும் கொஞ்சம் நயம்பட உரைப்பார்; ஆனால், ஸ்டாலின் 'டக்'கென்று சொல்லிவிடுகிறார் என்கிறார்களே?

அவருடைய அனுபவம், அவர் பழகிய தலைவர்களின் அனுபவம். அவரையும், என்னையும் ஒப்பிடுவது தவறு.

உங்களை நினைத்து நீங்களே பெருமிதப்படுகின்ற ஒரு விஷயம்; அடிக்கடி நினைத்துப் பார்க்கக் கூடிய ஒரு விஷயம் என்றால், எதைச் சொல்வீர்கள்?

உழைப்புக்கே சிகரமாக விளங்கிய தலைவர் கருணாநிதி, என்னைப்பற்றி ஒரு பத்திரிகை நிருபரிடம் பேசும்பொழுது, ஸ்டாலினைப் பற்றி ஒரு வரியில் சொல்லுங்கள் என்று கேட்டபொழுது, 'உழைப்பு, உழைப்பு, உழைப்பு' என்று சொன்னார். அந்த வரி இன்றைக்கும் என்னுடைய மனதில் நன்றாகப் பதிந்திருக்கிறது.

அதற்காகவே இன்னும் உழைக்க வேண்டும், உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று நான் உறுதியெடுத்துக் கொண்டிருக்கிறேன். தலைவர் கருணாநிதியே சொன்னது எனக்குப் பெருமையாக இருக்கிறது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தவறவிடாதீர்!திமுகமு.க.ஸ்டாலின்கருணாநிதிதமிழக சட்டப்பேரவைத் தேர்தல்எடப்பாடி பழனிசாமிஅதிமுகDMKMK stalinKarunanidhiTN assembly electionEdappadi palanisamyAIADMKPOLITICSதேர்தல் 2021

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x