Published : 17 Feb 2021 03:12 AM
Last Updated : 17 Feb 2021 03:12 AM

போலி நிறுவனங்கள் மூலம் ஜிஎஸ்டியில் ரூ.350 கோடி மோசடி: வரி ஆலோசகர் உட்பட 7 பேர் கைது

சென்னை

சென்னையில் போலி நிறுவனங்கள் மூலம் ரூ.350 கோடி ஜிஎஸ்டி வரி மோசடியில் ஈடுபட்டதாக வரி ஆலோசகர் உட்பட 7 பேரை சென்னை புறநகர் ஜிஎஸ்டி ஆணையரக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) வரிச் சலுகை பெறுவதற்காக சிலர் மோசடியில் ஈடுபடுவதாக, சென்னை புறநகர் மத்திய ஜிஎஸ்டி ஆணையரகத்தின் அமலாக்கம் மற்றும் இணக்க மேலாண்மை பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, 24 போலி நிறுவனங்களின் பெயரிலான போலி ரசீதுகள் மூலம் ரூ.299 கோடியும், இதர நிறுவனங்களுக்கு சட்டவிரோத உள்ளீட்டு வரி கடன் வழங்கியதன் மூலம் ரூ.53.35 கோடியும் மோசடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தீவிர விசாரணை, பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள், தொழில்நுட்ப உதவியுடன் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் வரி ஆலோசகர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதல்முறையாக, மோசடியில் ஈடுபட்ட ஒட்டுமொத்த கும்பலையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்கள், மற்றவர்களது ஆவணங்களை பயன்படுத்தி இந்த மோசடி செய்ததும், போலி நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி பதிவு உள்ளிட்டவற்றை வரி ஆலோசகர் செய்து தந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஜிஎஸ்டி மோசடிக்காகவே தொடங்கப்பட்ட இந்த போலி நிறுவனங்கள், சரக்குகள் மற்றும் சேவைகளை வழங்காமலேயே போலி ரசீதுகளை பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி உள்ளன. இதன்மூலம் பலனடைந்த நிறுவனங்கள் குறித்தும், வேறு யாரேனும் இதில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

வரி செலுத்துபவர்கள் ஜிஎஸ்டி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற, சென்னை அண்ணா நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் செயல்படும் உதவி மையத்தை நேரடியாகவோ, 044-26142850 மற்றும் 26142852 என்ற தொலைபேசி எண்கள், Sevakendra-outer-tn@gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். 044-26207700 என்ற எண்ணை தொடர்பு கொண்டும் விவரம் அறியலாம்.

ஜிஎஸ்டி கூடுதல் ஆணையர் பி.ஜெயபாலசுந்தரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி மோசடிக்காகவே தொடங்கப்பட்ட இந்த போலி நிறுவனங்கள், சரக்குகள் மற்றும் சேவைகளை வழங்காமலேயே போலி ரசீதுகளை பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x