Published : 16 Feb 2021 03:12 AM
Last Updated : 16 Feb 2021 03:12 AM

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட முதிர்வுத் தொகை 1,600 பேர் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது: சமூக நலத்துறை அதிகாரிகள் தகவல்

முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் 1,598 பயனாளிகளுக்கு அவரவர் வங்கி கணக்கில் முதிர்வு தொகை செலுத்தப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் கடந்த 1992-ம் ஆண்டு தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்ததிட்டத்தின்படி, குடும்பத்தில் ஒருபெண் குழந்தை இருந்தால் ரூ.50 ஆயிரம் ஆரம்ப முதலீட்டு தொகையாக சமூகநலத் துறை சார்பில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் செலுத்தப்படும்.

2 பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.25 ஆயிரம் ஆரம்ப காலமுதலீடாக செலுத்தப்படும். பெண் குழந்தையின் 18 வயதுக்கு பிறகு வட்டியுடன் கூடிய முதிர்வு தொகை வழங்கப்படும்.

இவ்வாறு, முதிர்வு அடைந்த தொகையை பயனாளிகளுக்கு காசோலையாக வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இவற்றுக்கு தீர்வு காண முதிர்வு தொகையை பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தும் முறை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமல்படுத்தப்பட்டது.

இதுதொடர்பாக சமூகநலத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

முதிர்வு தொகையை தாமதம்இன்றி பயனாளிகள் பெறுவதற்காகவே வங்கி கணக்கில் செலுத்தும் முறை அமல்படுத்தப்பட்டது. கரோனா பரவல் காரணமாக கடந்தஆண்டு முதிர்வு தொகையை வங்கி கணக்கில் செலுத்தும் பணிசற்று நிதானமாக நடந்தது. தற்போது இப்பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை 1,598 பேருக்கு அவரவர் வங்கி கணக்கில் முதிர்வு தொகை செலுத்தப்பட்டுள்ளது. மற்ற பயனாளிகளுக்கும் அவரவர் வங்கி கணக்கில் முதிர்வு தொகையை செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x