Last Updated : 15 Feb, 2021 03:12 AM

 

Published : 15 Feb 2021 03:12 AM
Last Updated : 15 Feb 2021 03:12 AM

பிரதமர் விழாவில் ஆஜரான அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாகா தலைவர்கள்: உறுதியானதா அதிமுக கூட்டணி?- ஓபிஎஸ், இபிஎஸ்ஸுடன் மோடி ஆலோசனை

பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி பங்கேற்ற அரசு விழாவில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாகா தலைவர்கள் பங்கேற்றதன் மூலம் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அமைந்த கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

அரசு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக, பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால் விழா நடைபெற்ற நேரு உள் விளையாட்டரங்கில் பொதுக்கூட்டம்போல அதிமுக, பாஜகவினர் திரண்டிருந்தனர்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. வரும்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜகமட்டுமே கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளன. மற்ற கட்சிகள் இதுவரை அதிமுகவுடனான கூட்டணியை அறிவிக்கவில்லை. தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி தொடர்பாக முரண்பட்ட கருத்துகளை வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, தேமுதிக கொள்கைப் பரப்புச் செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், துணைச் செயலாளர் பி.பார்த்தசாரதி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், மூத்த தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, அதிமுக சார்பில் அமைச்சர்கள், மு.தம்பிதுரை உள்ளிட்ட எம்.பி.க்கள் என்று பலரும் கலந்து கொண்டனர்.

3 மணி நேரத்துக்கும் மேலாக ஒரே இடத்தில் அமர்ந்திருந்த அவர்கள் அனைவரும் கலகலப்பாக நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

அரசு விழா என்பதால் பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் யாரும் அரசியல் பேசவில்லை. பிரதமர் தனது உரையில், இலங்கைத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை பற்றியும், தேவேந்திரகுல வேளாளர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றியது குறித்தும் பேசியது தேர்தல் பிரச்சாரம் போலவே அமைந்திருந்தது. விழா முடிந்ததும் யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் இருவருடன் கைகோர்த்து பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்தார்.

‘பெங்களூரு சிறையில் இருந்து சென்னை வந்துள்ள சசிகலாவை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்களில் பலர் சந்திக்கக் கூடும். அதன் மூலம் அதிமுகவுக்குள் பெரும் குழப்பம் ஏற்படும். அதற்கான முயற்சிகளில் சசிகலா ஈடுபட்டு வருகிறார்’ என்று அரசியல் அரங்கில் பேசப்பட்டு வரும் நிலையில் முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ்ஸுடன் மோடி கைகோர்த்து நின்றது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக அதிமுக அமைச்சர் ஒருவரிடம் பேசியபோது, “அதிமுகவின் இரு தலைவர்களுடன் மோடி கைகோர்த்து நின்றதன் மூலம், இருவரும் ஒற்றுமையாக இருந்தால்தான் சாதிக்க முடியும் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார் பிரதமர். மற்றவர்களுக்கும் புரிய வைத்துள்ளார்.

சசிகலாவையும், அமமுகவையும் அதிமுகவில் இணைக்க பாஜகதலைமை வற்புறுத்தி வருவதாக வரும் செய்திகளுக்கும் இதன்மூலம் மோடி முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவே கருதுகிறேன். இது அரசு விழாவாக இருந்தாலும் பாமக,தேமுதிக, தமாகா தலைவர்களும் பங்கேற்றதன் மூலம் இந்தத் தேர்தலிலும் அதிமுக -பாஜக கூட்டணியில் தொடர்வோம் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் என்றே நினைக்கிறேன்" என்றார்.

விழா முடிந்து கிளம்பிய மோடி, மேடையில் இருந்தவாறு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி தலைவர்களுக்கு வணக்கம் செலுத்திய பிறகு புறப்பட்டார்.

நேரு உள் விளையாட்டரங்கில் இருந்து புறப்படும் முன்பு, முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோருடன் 10 நிமிடங்கள் மோடி தனியாக ஆலோசனை நடத்தினார். அப்போது கூட்டணி, சசிகலா விவகாரம் மற்றும் நடப்பு அரசியல் சூழ்நிலைகள் குறித்து பேசியதாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில் தனது சென்னை வருகை மூலம் அதிமுகவின் ஒற்றுமையை மோடி வலியுறுத்தி இருப்பதோடு, கூட்டணியையும் உறுதிப்படுத்தி இருப்பதாக அதிமுக - பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.

தேவேந்திரகுல வேளாளர் கோரிக்கையை நிறைவேற்றியதற்கு முக்கியத்துவம் அளித்துப் பேசிய மோடி, அவர்களின் பாரம்பரிய, கலாச்சார பெருமைகள் குறித்தும் பேசினார். இதன்மூலம் அவர்களின் வாக்கு வங்கியை பாஜக குறி வைப்பதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x