Published : 14 Feb 2021 03:17 AM
Last Updated : 14 Feb 2021 03:17 AM

பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு; பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகை: மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

சென்னை

சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்ட சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க இன்று சென்னை வரும் பிரதமர் மோடிக்கு, பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

கடந்த ஜனவரி 19-ம் தேதி டெல்லி சென்றபோது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதல்வர் பழனிசாமி, பல்வேறு திட்டங்கள் தொடர்பாக மனு அளித்தார். அப்போது, கல்லணை சீரமைப்பு, பவானி நவீனப்படுத்தும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ வரையிலான மெட்ரோ ரயில் சேவை, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தூத்துக்குடி எரிவாயு திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைக்கவும் தமிழகம் வருமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி, இன்று சென்னை வருகிறார். அதன்படி, இன்று காலை டெல்லியில் இருந்து 7.50 மணிக்கு விமானப்படை விமானம் மூலம் 10.35 மணிக்குபிரதமர் சென்னை வருகிறார். அவரைஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.

பின்னர், பிரதமர் விமான நிலையத்தில் இருந்து, ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு செல்கிறார். அங்கிருந்து கார் மூலம், விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கம் செல்கிறார். அங்கு 11.15 முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

அப்போது, சென்னை மெட்ரோ ரயில்முதல் கட்ட திட்டத்தில் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை விரிவாக்கம் செய்யப்பட்ட ரயில் சேவை, சென்னை கடற்கரை முதல் அத்திப்பட்டு வரை 4-வது ரயில் வழித்தடம், விழுப்புரம் - தஞ்சாவூர் - திருவாரூர் வரை மின் மயமாக்கப்பட்ட ஒருவழி ரயில் பாதை ஆகியவற்றை தொடங்கி வைக்கிறார்.

மேலும், கல்லணை கால்வாய் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டம்,தையூரில் ரூ.1,000 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள சென்னை ஐஐடியின் டிஸ்கவரி வளாகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ஆவடியில் தயாரிக்கப்பட்ட அர்ஜுன் எம்பிடி ரக கவசவாகனத்தை ராணுவத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, அதே வளாகத்தில் 12.35 முதல் 12.50 வரைமுக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார். குறிப்பாக, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேச உள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது கூட்டணி தொடர்பாகவும் சசிகலாதரப்பை இணைப்பதா, வேண்டாமா என்பது குறித்தும் தேர்தல் தொடர்பாகவும் விவாதிக்க உள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து, அங்கிருந்து சாலை வழியாக ஐஎன்எஸ் அடையாறு செல்லும் பிரதமர், ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் சென்று, அதன்பின் கொச்சி செல்கிறார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்தியபாதுகாப்பு படையினருடன் இணைந்துதமிழக காவல் துறை மேற்கொண்டுள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் வளாகம் அமைந்துள்ள பகுதி நேற்று முதலேமுழுமையாக காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்தை சுற்றிலும் 6 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். சாலை வழியாக பிரதமர் பயணிக்கும் பகுதிகளில் குறிப்பிட்ட இடைவெளியில் காவல்துறையினர் இருபுறமும் நிறுத்தப்பட்டுள்ளனர். இப்பகுதியில் ட்ரோன்பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் வருகையை முன்னிட்டு, பாஜக சார்பிலும் அதிமுக சார்பிலும் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஐஎன்எஸ் அடையாறு முதல்நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கம் வரை 5 இடங்களில் மேடை அமைத்து, பல்வேறு இசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று இலவச பயணம்

புதிய சேவை தொடக்கத்தை முன்னிட்டு, சென்னையில் அனைத்து மெட்ரோதடங்களிலும் இன்று மதியம் 2 மணி முதல்இரவு 11 மணி வரை பொது மக்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x