நீட், ஜேஇஇ தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்க அரசுப் பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

அமைச்சர் செங்கோட்டையன்: கோப்புப்படம்
அமைச்சர் செங்கோட்டையன்: கோப்புப்படம்
Updated on
1 min read

நீட், ஜேஇஇ போன்ற தேசிய அளவிலான தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க, தமிழக அரசுப் பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை, அதனால், தனியார் உதவியுடன் ஆன்லைன் மூலமாக மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த குள்ளம்பாளையத்தில் கோழி அபிவிருத்தி திட்டம் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 400 பயனாளிகளுக்கு விலையில்லா அசீல் நாட்டு கோழி குஞ்சுகளும், 50 பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகளையும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (பிப். 12) வழங்கினார். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

"தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகள் கொடுப்பது தான் வழக்கம். ஆனால், தமிழக முதல்வர் தேர்தலுக்கு முன்னரே விவசாய கடனை தள்ளுபடி செய்து, 15 நாட்களில் அதற்கான ரசீது வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். கூட்டுறவு பயிர்க் கடன் தள்ளுபடியில் தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டம் தான் கூடுதலாக பயனடைந்துள்ளது.

பத்துக்கும் குறைந்த மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் நூலகங்கள் அமைப்பது குறித்து இன்னும் அரசு பரிசீலிக்கவில்லை. பத்துக்கும் குறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலம் கூடுதல் மாணவர்கள் சேர்க்கைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வி தொலைக்காட்சி மூலம் பயின்ற மாணவர்களின் கல்வி தரத்தை ஆய்வு செய்ய திறனாய்வு தேர்வுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் நீட் தேர்வு பயிற்சி பெற 21 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், 5,817 பேர் மட்டுமே பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். தனியார் பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் நீட் பயிற்சி பெறுகின்றனர் என்பது எங்களுக்கு தெரியாது.

மத்திய அரசு கொண்டுவரும் நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க அரசுப் பள்ளிகளில் பயிற்சி பெற்றவர்கள் இல்லை. அதனால் தனியார் மூலம் ஆன்லைன் மூலமாக மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான சீருடை, காலனி போன்ற அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டுவிட்டது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், பொதுத் தேர்வுகள் பற்றிய அட்டவணை வெளியிடப்படும். பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் நடத்துவது குறித்து முதல்வரிடம் கலந்தாலோசனை செய்து அறிவிக்கப்படும்".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in