Published : 12 Feb 2021 03:16 AM
Last Updated : 12 Feb 2021 03:16 AM

வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகள் எவை? - தீவிர ஆய்வில் தேமுதிக மூத்த நிர்வாகிகள்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் தேமுதிகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்பது குறித்து அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் மாவட்டங்கள்தோறும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். வட மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ள 20 தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த தேமுதிக முடிவு செய்துள்ளது.

வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி நீட்டித்து வந்தாலும், இன்னும் உறுதிப்படுத்தாத நிலை தொடர்கிறது. இருப்பினும், தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து, தேர்தல் பணியை தொடங்கியுள்ளது. இதுதவிர, தேமுதிக பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் உட்பட 7 மூத்த நிர்வாகிகள் 7 மண்டலங்களாக பிரித்து தேர்தல் பணியாற்றிட, மாவட்டங்கள்தோறும் உள்ளடங்கிய தொகுதிகளில் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால், அந்தந்த மாவட்டங்களுக்கு தேமுதிக நிர்வாகிகள் நடத்தும் கூட்டங்களில் தேர்தலை எதிர்கொள்வது, பூத்கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதா? பெரியதாக இருக்கும் பகுதிகள், கிளைகளை கண்டறிந்து அவற்றை பிரித்து புதிய நிர்வாகிகள் நியமிப்பது போன்ற தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதவிர, சட்டப்பேரவை தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் தேமுதிகவுக்கு செல்வாக்கு அதிகமாக இருக்கிறது என ஆய்வு செய்து, தலைமை நிர்வாகத்துக்கு அறிக்கையாக அளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக தேமுதிக மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘தேமுதிகவுக்கு தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் கணிசமாக வாக்கு வங்கி இருக்கிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலுடன் ஒப்பிடும்போது 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தலா 15 ஆயிரம் வாக்குகள் இருக்கின்றன.

விழுப்புரம், கடலூர், வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்டங்களில் தேமுதிகவுக்கு மற்ற இடங்களை காட்டிலும் செல்வாக்கு சற்று அதிகமாக இருக்கிறது. இங்குள்ள மொத்த தொகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தலா 35 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வாக்குகள் இருக்கின்றன.இதற்கிடையே, வரும் சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக கள ஆய்வுகளை மேற்கொண்டு, கட்சி தலைமையிடம் அறிக்கையாக வழங்கி வருகிறது. இதையடுத்து, கட்சி தலைமை முடிவு செய்து கூட்டணியில் அந்த தொகுதிகளை கேட்டு வாங்குவது அல்லது தனித்து போட்டியிடுவதாக இருந்தால் செல்வாக்கு அதிகமாக இருக்கும் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது போன்ற முடிவுகளை எடுக்க இந்த களஆய்வு முடிவுகள் உதவும்’’என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x