Published : 11 Feb 2021 09:07 AM
Last Updated : 11 Feb 2021 09:07 AM

4 ஆண்டு ஆட்சியிலே இருந்தது உங்கள் திறமையாலா? அல்லது பாஜக காத்து நின்றதாலா?-முதல்வர் பழனிசாமிக்கு கனிமொழி கேள்வி

சென்னை

விவசாயத்தைப் பற்றிச் சட்டம் போட மத்திய அரசுக்கு உரிமை கிடையாது. மாநிலப் பட்டியலில் இருக்கக்கூடியது விவசாயம். ஆனால், மாநில உரிமைகள் போனாலும் தனது பதவி போகக் கூடாது என்று கருதி அதை ஆதரிப்பவர்தான் பழனிசாமி. இப்படி எல்லாவற்றையும் அடகு வைத்து ஆட்சியில் இருப்பது ஒரு சாதனையா? எனக் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று இரவு திருப்பூர் தெற்கு மாவட்டம், மடத்துகுளம் கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட குமரலிங்கம் பேரூராட்சியில் பொதுமக்கள் மத்தியில் கனிமொழி தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

“10 ஆண்டுகளாக இந்த ஆட்சியிலே மக்கள் ஏதாவது பலன் பெற்றிருக்கிறார்களா என்றால் ஒன்றுமே இல்லை. இந்தப் பத்தாண்டுகளில் தமிழ்நாடு பின்னோக்கிச் சென்று இருக்கிறது என்பதுதான் உண்மை. இதுதான் இந்த ஆட்சியின் சாதனை.

தமிழ்நாட்டில் இன்று வேலையில்லை, ஒவ்வொரு குடும்பத்திலும் படித்த இளைஞர்கள் வேலையின்றித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். துப்புரவுப் பணியாளர் பணிக்குக் கூட போகத் தயாராக இருக்கிறோம் என்று 300 துப்புரவுப் பணியாளர்களுக்கு 5 ஆயிரம் விண்ணப்பங்கள் வருகின்றன. அதுவும் எம்.காம், பிஹெச்டி, பொறியியல் படித்தவர்கள். 23 லட்சம் பேர் இன்று வேலையில்லாமல் தமிழகத்தில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முதல்வர் பெருமையாகச் சொல்கிறார். நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டோம் என்று சொல்லிக் கொள்கிறார். நான் கேட்கிறேன். ஆட்சியிலே இருந்தது உங்களுடைய திறமையாலா? அல்லது பாஜக உங்களைக் காத்து நின்றதா? அதுவும் எப்படி உங்களைக் காப்பாற்றினார்கள்? நீங்கள் தமிழ்நாட்டின் அடையாளங்கள், பெருமைகள், இந்த நாட்டு இளைஞர்களின் எதிர்காலம் எல்லாவற்றையும் அவர்கள் காலடியில் கொண்டுபோய் அடகு வைத்ததால்தான் உங்கள் ஆட்சியைக் காப்பாற்றினார்கள்.

நீட் தேர்வை ஒழுங்காக எதிர்த்தீர்களா? இல்லை. அதனால் எத்தனை இளைஞர்கள், இளம்பெண்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்தார்கள்? அவர்களின் மருத்துவக் கனவுகளை எல்லாம் சிதைத்தீர்கள். எந்தப் பிள்ளைகளுக்கு மருத்துவக் கல்வி இல்லையென்று சொன்னார்களோ அவர்களுக்கு மருத்துவக் கல்வி கொடுப்பதற்காக தலைவர் கருணாநிதி கட்டியவைதான் அரசு மருத்துவக் கல்லூரிகள். அந்த மருத்துவக் கல்லூரிகளில் இன்று நம்முடைய பிள்ளைகளுக்கு இடமில்லை என்று சொல்லக்கூடிய ஆட்சி இந்த ஆட்சி.

விவசாயச் சட்டங்களை எதிர்த்து 80 நாட்களாக டெல்லியில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எதிரி நாட்டுப் படை வீரர்களைத் தடுத்து நிறுத்துவதுபோல அவர்களைத் தடுக்க அரண்களை உருவாக்கி முள்வேலிகளை உருவாக்கி அந்த விவசாயிகளைத் தடுத்து நிறுத்து வைத்திருக்கிறார்கள். அவசரத்துக்கு அங்கே ஒரு ஆம்புலன்ஸ் கூட போக முடியாத நிலை. நம் நாட்டின் விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் அடகு வைக்கக்கூடிய அந்தச் சட்டங்களை நல்ல சட்டங்கள், வரவேற்கிறேன் என்று பழனிசாமி சொல்கிறார்.

விவசாயத்தைப் பற்றிச் சட்டம் போட மத்திய அரசுக்கு உரிமை கிடையாது. மாநிலப் பட்டியலில் இருக்கக் கூடியது விவசாயம். ஆனால், மாநில உரிமைகள் போனாலும் தனது பதவி போகக் கூடாது என்று கருதி அதை ஆதரிப்பவர்தான் பழனிசாமி, இப்படி எல்லாவற்றையும் அடகு வைத்து ஆட்சியில் இருப்பது ஒரு சாதனையா?

அப்படி ஆட்சி நடத்தி மக்களுக்கு ஏதாவது ஒரு நல்லது இருக்கிறதா? இல்லை ரேஷன் கடையில் பொருட்கள் ஏதும் கிடைக்கிறதா? எத்தனை நாட்களுக்கு கைரேகை இல்லை என்று சொல்லி உங்களைத் திருப்பி அனுப்புகிறார்கள். (ஒரு நாள் ரேஷன் கடைக்குப் போவதற்கு நான்கு நாள் லீவு போட வேண்டியிருக்கு என்று கூட்டத்தில் இருந்து சொல்கிறார்கள்)

ஓஏபி ஆயிரம் ரூபாய் வாங்குவதற்கு 3 ஆயிரம், 4 ஆயிரம் செலவு பண்ணினாலும் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட நிலை. மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி கிடையாது. பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடையாது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி கிடையாது. அவை செயல்படுவதே கிடையாது. குடிமராமத்துப் பணிகள் போல பொய்க் கணக்கு எழுதி பணம் சம்பாதிக்கக்கூடிய ஆட்சி இந்த ஆட்சி.

உங்களை எல்லாம் பார்க்கும்போது இந்த ஆட்சியின் முடிவு தெளிவாகத் தெரிகிறது. தேர்தல் வரட்டும், நாங்கள் யார் என்று காட்டுகிறோம் என்று பெண்கள் சொல்வது தெளிவாகத் தெரிகிறது. பெண்களின் வாழ்க்கையைப் போராட்டமாக மாற்றியிருக்கக் கூடிய ஆட்சி இந்த ஆட்சி. திமுக ஆட்சியிலே மகளிர் சுய உதவிக் குழு எப்படிச் செயல்பட்டதோ அதேபோல ஸ்டாலின் ஆட்சியிலும் சுழல்நிதி உள்ளிட்ட அனைத்து நிதிகளும் கிடைக்கும், வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்ற உறுதியை நான் உங்களுக்கு வழங்குகிறேன்”.

இவ்வாறு கனிமொழி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x