Last Updated : 10 Feb, 2021 03:14 AM

 

Published : 10 Feb 2021 03:14 AM
Last Updated : 10 Feb 2021 03:14 AM

ஷவரில் ஆனந்த குளியல், நடைப்பயிற்சி: நல வாழ்வு முகாமில் யானைகள் உற்சாகம்

தேக்கம்பட்டி யானைகள் நல வாழ்வு முகாமி, தும்பிக்கையால் தழுவி அன்பை பரிமாறிக் கொண்ட யானைகள் கோமதி, லட்சுமி, பூமா

கோவை

கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டியில் பவானி ஆற்றங்கரையில், கோயில் யானைகளுக்கான 48 நாட்கள் சிறப்பு நல வாழ்வு முகாம் நேற்று முன்தினம்தொடங்கியது. இதில் தமிழகத்தில்உள்ள கோயில்களுக்கு சொந்தமான 21 யானைகள், மடங்களுக்கு சொந்தமான 3 யானைகள், புதுச்சேரியில் உள்ள கோயிலுக்கு சொந்தமான 2 யானைகள் என மொத்தம் 26 யானைகள் கலந்து கொண்டுள்ளன.

முகாமில் யானைகளுக்கு, கால்நடைத் துறையினர் மூலம் உடல் எடை மற்றும் உடல் நலப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. உடல் எடைக்கேற்ப சத்து மாத்திரைகள், தீவனங்கள் வழங்கப்படுகின்றன. தினசரி 5 கிலோ மீட்டர்தூரத்துக்கு யானைகளை, அதன்பாகன்கள் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்கின்றனர். பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள ஷவரில் காலை, மாலை நேரங்களில் யானைகள் உற்சாகமாக குளிக்கின்றன. மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் யானைசெங்கமலம், சங்கரன் கோவில் சங்கரநாத சுவாமி கோயில் யானை கோமதி உள்ளிட்ட சில யானைகள் ‘ஸ்டெப்கட்டிங்’வுடன் வலம் வருகின்றன. கோமதி, லட்சுமி,பூமா ஆகியவைஓராண்டு இடைவெளிக்குப் பிறகு சந்தித்ததால், ஒன்றையொன்று தும்பிக்கையால் தழுவி அன்பை பரிமாறிக்கொண்டன.

பாகன்களுக்கு பயிற்சி

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது,‘‘யானைகளுக்கு பசும்புல், கூந்தல்பனை, தென்னை மட்டை, பசுஞ்சோளத் தட்டை, கரும்பு, அண்ணாசிப் பழம், ஆப்பிள், சாத்துக்குடி, பேரிச்சம் பழம், வாழைப்பழம், கரும்பு போன்றவை தீவனமாக வழங்கப்படுகிறது. தவிர, லிவ் 52, அஷ்ட சூரணம், மினரல் மிக்ஸ், மல்டி விட்டமின்,புரோட்டின் பவுடர், சவன பிராஷ், பச்சை பயறு, கொள்ளு, ராகி, அரசி, கருப்பட்டி ஆகிய ஊட்டச்சத்து மருந்துகளும் தீவனத்தோடு வழங்கப்படுகின்றன.

யானைப் பாகன்களுக்கு யானைகள் குறித்தும், அதன் வளர்ப்பு முறைகள் குறித்தும், அதன் உடல் நலத்தை பாதுகாப்பது குறித்தும், சத்தான உணவுகள் குறித்தும் கால்நடை மருத்துவர்கள் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. 7 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் யானைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

யானைகளின் சிறு சிறு புண், கண் பார்வைக் குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தடுப்பு மின்வேலி, தொங்கும் மின் வேலி, எச்சரிக்கை மின் அலங்கார விளக்குகள் ஆகியவை முகாமை சுற்றிலும் பொருத்தப்பட்டுள்ளன. தவிர, 11 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 7 இடங்களில் வாட்ச் டவர் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x