Published : 09 Feb 2021 10:31 AM
Last Updated : 09 Feb 2021 10:31 AM

வட மாநில இளைஞர்களை நெய்வேலி என்எல்சி பணியாளர்களாக தேர்வு செய்யும் சதி: வைகோ கண்டனம்

வைகோ: கோப்புப்படம்

சென்னை

வட மாநில இளைஞர்களை நெய்வேலி என்எல்சி பணியாளர்களாக தேர்வு செய்யும் சதி நடப்பதாக, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, வைகோ இன்று (பிப். 09) வெளியிட்ட அறிக்கை:

"மத்திய பாஜக அரசு, தமிழகத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களை பணி நியமனம் செய்து வருகிறது. குறிப்பாக ரயில்வே துறை, திருச்சி பாரத் மிகுமின் நிறுவனம், அஞ்சல் துறை போன்றவற்றில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது இல்லை.

தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த பொதுத்துறை நிறுவனமாகவும், நவரத்னா தகுதியைப் பெற்ற நிறுவனமாகவும் செயல்பட்டு வரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பணி நியமனங்களில் வட மாநிலத்தினர் எல்லா நிலையிலும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், என்எல்சி நிறுவனம் கடந்த பிப்ரவரி 2020 இல் நிர்வாக பட்டதாரி பயிற்சியாளர் (Graduate Excutive Trainee) 259 இடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகள் மற்றும் மேலாண்மை பட்டதாரிகளைத் தேர்வு செய்ய அறிவிப்பு ஆணை வெளியிட்டு இருக்கிறது. பின்னர் அதற்கான எழுத்துத் தேர்வுகளும் நடைபெற்றன.

இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில், தமிழ்நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் பங்கேற்றனர். எழுத்துத் தேர்வில் பங்கேற்றவர்களிலிருந்து 1,582 பேரை அடுத்தகட்ட நேர்முகத் தேர்வுக்கு என்எல்சி நிறுவனம் முன்னுரிமைப் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில், தமிழகத்திலிருந்து வெறும் 8 பேர் மட்டுமே இடம்பெற்று உள்ளனர்.

ஜிஇடி (GET) எனப்படும் இந்தப் பயிற்சி முடித்தவர்கள் என்எல்சியில் லட்சக்கணக்கில் ஊதியம் பெறும் அதிகாரிகளாக பணியில் அமர்த்தப்படுவார்கள். இத்தகைய பணிகளில் 259 காலி இடங்களில் நூறு சதவீதம் குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பணி ஆணை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

என்எல்சி நிறுவனத்திற்காக தங்கள் நிலங்களையும், வீடுகளையும் இழந்த மண்ணின் மைந்தர்களையும், தமிழ்நாட்டு இளைஞர்களையும் புறக்கணித்துவிட்டு, வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களை நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பொறியாளர்களாக தேர்வு செய்யும் சதியை ஏற்கவே முடியாது. இது கடும் கண்டனத்துக்கு உரியது.

என்எல்சி நிறுவனம் தேர்வு செய்து வெளியிட்டுள்ள நேர்முகத் தேர்வுக்கான முன்னுரிமைப் பட்டியலை ரத்துச் செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் பொறியியல் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு அளிக்க வேண்டும். இல்லையேல் மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்".

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x