Last Updated : 20 Jun, 2014 10:52 AM

 

Published : 20 Jun 2014 10:52 AM
Last Updated : 20 Jun 2014 10:52 AM

சென்னையில் குடிநீர் மாசுபடும் பிரச்சினை: சாட்டிலைட் சிட்டி மூலம் நிரந்தர தீர்வு - நிபுணர்கள் யோசனை

சென்னையில் குடிநீர் மாசுபடுவதை நிரந்தரமாகத் தடுப்பது குறித்து நிபுணர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

சென்னையில் வீடுகளை யொட்டி சாலைகளில் மழைநீர் வடிகால் அமைப்புகள் அமைக்கப்படுகின்றன. பிரதான குடிநீர் குழாய், சாலையின் ஒருபுறம் மட்டும் 2 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டாலும், குடிநீர் இணைப்பு இருபுறமும் உள்ள வீடுகளுக்கும் வழங்கப்படுகிறது.

சாலையில் குடிநீர் குழாய் அமைந்துள்ள பக்கத்தில் உள்ள வீடுகளுக்கு இணைப்பு கொடுப்பதில் பிரச்சினையில்லை. எதிர்ப்புறத்தில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கும்போது அங்கேயுள்ள மழைநீர் வடிகாலைத் தாண்டிச் செல்ல வேண்டியுள்ளது.

ஆரம்ப காலத்தில் இரும்புக் குழாய்களை பயன்படுத்தியே குடிநீர் இணைப்பு தரப்பட்டது. அந்த குழாய்கள் மழைநீர் கால்வாயின் குறுக்கே செல்வதால் நாளடைவில் துருப்பிடிக்கிறது. அப்போது குடிநீருடன் மாசுபட்ட நீர் கலந்துவிடுகிறது. சென்னையில் 70 ஆண்டுகளுக்கு முன்பாக ஆரம்பித்த இப்பிரச்சினை, தற்போது வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், மிகவும் நெரிசலான மற்றும் பழமையான பகுதிகளில் இப்பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது.

இதுகுறித்து சென்னைப் பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீரகற்றல் வாரிய முன்னாள் பொறியியல் இயக்குநர் எஸ்.சுந்தரமூர்த்தி, வாரியத்தின் முன்னாள் நிலத்தடி நீர் வல்லுநர் ஜெயபாலன் ஆகியோர் ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:

சென்னையில் குடிநீரில் மாசுபட்ட நீர் கலப்பதைத் தடுக்க உலக வங்கி உதவியுடன் 1990-2000-ம் ஆண்டு காலக் கட்டத்தில் இரும்புக் குழாயை அப்புறப்படுத்திவிட்டு, 30 முதல் 40 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட வளையக் கூடியதும், உடையாததுமான பெரிய பிளாஸ்டிக் குழாய்கள் பதிக்கப்பட்டன. இதனால், 80 சதவீத மாசு கலப்பு பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.

மக்கள் நெருக்கமாக வசிக்கும் வடசென்னை பகுதிகளில் பிரதான குடிநீர் குழாய்களை மாற்ற வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதிகளின் சாலைகள் மிகவும் குறுகலாக அமைந்திருப்பதால் இப்பணியை செயல்படுத்துவது சிரமமாகவும், துரிதப்படுத்த முடியாமலும் உள்ளது.

சில நாடுகளில், இப்பிரச்சினை உள்ள தெருவில் அனைத்து வீடுகளையும் இடித்துவிட்டு, குழாய் பதிப்புப் பணியை முடித்த பிறகு அங்கு அரசே வீடு கட்டிக் கொடுக்கிறது. இதெல்லாம் நமக்கு இருக்கும் நிதிச் சுமையில் சாத்தியமில்லை.

இதற்கு மாற்றாக, கடந்த காலத்தில் செய்ததுபோல சென்னை பெருநகரையொட்டிய புறநகர் பகுதிகளில் சிறு நகரங்களை (சாட்டிலைட் சிட்டி) உருவாக்கி, மக்கள் தொகை மற்றும் வீடுகளின் எண்ணிக்கையை குறைக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற திட்டங்களால் மட்டுமே குடிநீரில் மாசுபட்டநீர் கலப்பது போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும். புதிதாக உருவாக்கப்படும் சிறு நகரங்களில் தேவைப்படும் அழுத்தத்துடன் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கினால் மாசுபட்ட நீர் அதில் கலப்பதை முற்றிலுமாகத் தடுக்கலாம். இந்த முறை தற்போது இந்தியாவிலேயே பல்வேறு பகுதிகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x