Published : 09 Feb 2021 08:14 AM
Last Updated : 09 Feb 2021 08:14 AM

கட்சிகளைப் பிரித்து வெற்றிபெற பாஜக முயற்சி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புகார்  

நாகர்கோவிலில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராமல், மத்திய அரசு பிடிவாதமாக இருப்பதால், 230-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். சிலர் உயிரிழந்து விட்டனர்.

இவை அனைத்தும் ஜனநாயகப் படுகொலை. பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தெளிவான அறிவுரை கூறியுள்ளது. ஆனால், தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் 2 ஆண்டு காலம் கிடப்பில் போட்டபிறகு, இதற்கான அதிகாரம் குடியரசுத் தலைவருக்குத்தான் உள்ளதாக கூறுவது, கால்பந்தாட்டக் களத்தில் பந்தை அடிப்பது போல் உள்ளது. 12 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க் கடன் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் கூறுகிறார்.

ஆனால், தற்போதுதான் கடன் பெற்றவர்கள் பட்டியலை கணக்கெடுக்கிறார்கள். இது எப்படி சாத்தியம் என்பது தெரியவில்லை. பலருக்கு நெருக்கடி கொடுத்து விவசாய கடனை செலுத்த வைத்துவிட்டு, தற்போது கடன் ரத்து என அரசு சொல்கிறது.

அரசுப் பணியில் அமர்த்துதல், பணி மாறுதல், பணி ஆணை ஆகியவற்றில் ஊழல் நடக்கிறது. அமைச்சர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர். சசிகலா வருகையால் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படாது, அதிமுக கட்சிக்குள் மாற்றம் ஏற்படலாம். பாஜக, காய்களை நகர்த்தி அரசியலில் பல கட்சிகளைப் பிரித்து வெற்றி பெறமுயல்கிறது. திமுக கூட்டணியில் புதிய கட்சிகளை இணைக்க வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x