Published : 08 Feb 2021 03:10 AM
Last Updated : 08 Feb 2021 03:10 AM

அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் சசிகலா நுழைந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் சசிகலா நுழைந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னையில் அவர் நேற்று கூறியதாவது:

நாங்கள் பதற்றத்தில் இருப்பதாக கூறும் டிடிவி தினகரன்தான் பதற்றத்தில் இருக்கிறார். கடந்த 4 ஆண்டுகளில் சசிகலாவின் ஏகப்பட்ட பணத்தை அவர் அபகரித்துவிட்டார். வெளியே வந்துள்ள சசிகலா கணக்கு வழக்கு கேட்பாரேஎன்று அவர்தான் பதற்றத்தில் இருக்கிறார்.

நாங்கள் ஏற்கெனவே தெளிவான முடிவு எடுத்துவிட்டோம். சசிகலாவை அதிமுகவில் இணைத்துக்கொள்ள 100 சதவீதம் வாய்ப்பே இல்லை என்று முதல்வர் பழனிசாமி தெளிவாக கூறிவிட்டார். அதில் மாற்றம் இல்லை. அதனால் நாங்கள் பதற்றப்பட அவசியம் இல்லை. சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் யாரும் இல்லாத இயக்கமாக அதிமுக இருக்கிறது.

கட்சித் தொண்டர்கள் என்ற அடிப்படையில்தான் டிஜிபியிடம் புகார் கொடுத்துள்ளோம். பதவி என்பது எங்களுக்கு இரண்டாம்பட்சம்தான். எங்களிடம் கட்சியா, ஆட்சியா என்று கேட்டால் பதவியை தூக்கி எறிந்துவிட்டு கட்சியைத்தான் காப்பாற்றுவோம்.

சசிகலாவை ஜெயலலிதா மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொண்டபோது, ‘கட்சிக்காரர்கள் விஷயத்தில் தலையிடக் கூடாது.கட்சியில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது’ என்ற நிபந்தனையுடன் சேர்த்துக்கொண்டார். அதுபோல இப்போதும் இருக்க வேண்டும். உங்களுக்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. மினி சட்டப்பேரவை தேர்தலாக நடந்த இடைத் தேர்தலில் அதிமுகவை எதிர்த்து தினகரன் போட்டியிட்டார். உங்களை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆன்மா மன்னிக்கவே மன்னிக்காது. அதையும் மீறி வெற்றி பெற்று ஜெயலலிதாவின் ஆட்சியை நிலை நிறுத்தினோம்.

திமுகவின் ‘பி’ டீமாக செயல்பட்டவர் தினகரன். இன்று சசிகலா என்ற போர்வையில் அவதாரம் எடுத்து வருகிறார்கள். எத்தனை அவதாரம் எடுத்து வந்தாலும், எத்தனை சசிகலா வந்தாலும் அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது. மு.க.ஸ்டாலினும், டிடிவி தினகரனும் கைகோத்துக்கொண்டு அன்று போலவே இப்போதும் முயற்சிக்கின்றனர். சசிகலாவும், தினகரனும் எடுக்கும் இந்த முயற்சியும் தோல்வியுறும். அதிமுக மீண்டும் மகத்தான வெற்றி பெறும். ஈ, கொசுவுக்கு நாங்கள் பயப்படமாட்டோம். அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் சசிகலா நுழைந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 100சதவீதம் கடைசி வரை எங்களுடன்தான் இருப்பார். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x