புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் மலர், அலங்காரச்செடி கண்காட்சி தொடக்கம்
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் இரண்டு நாட்கள் நடைபெறும் மலர், அலங்காரச் செடிகள் கண்காட்சி இன்று தொடங்கிய நிலையில், கரோனா தொற்று காரணமாக, சிறு நிகழ்வாக மட்டுமே நடத்தப்படுகிறது.
புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் சார்பில், தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மலர், காய் மற்றும் கனிகள் கண்காட்சி நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் விரிவாக நடைபெறும் மலர், காய் மற்றும் கனிக்காட்சிக்குப் பதிலாக, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் மலர் உற்பத்தி, காய்கறிச் சாகுபடி தொழில்நுட்பங்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டு, சிறிய நிகழ்வாக நடத்தப்படும் என வேளாண்துறை அறிவித்திருந்தது.
அதன்படி, புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் தோட்டக்கலைப் பிரிவில் உற்பத்தி செய்யப்பட்ட மலர்கள் மற்றும் அலங்காரச் செடிகள் கண்காட்சி இன்று (பிப்.6) தொடங்கியது. இக்கண்காட்சியில் வீட்டு மாடியில் காய்கறிகள், கீரைகள் சாகுபடி, மண்ணில்லாச் சாகுபடி முறையில் காய்கறிகள் மற்றும் கீரைகள் சாகுபடி போன்ற மாதிரிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மாதிரி கிராம சந்தையில் காய்கறிகள், கனி வகைகள், உலர்மீன் வகைகள், கோழி மற்றும் கோழிக் குஞ்சு வகைகள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட அலங்காரச் செடிகள், மூலிகைச் செடிகள், உயிர்ரகப் பூச்சி மற்றும் பூஞ்சாணக் கொல்லிகள், பண்ணை விளை பொருட்கள் போன்றவையும் காட்சிப்படுத்தப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், சிறு உணவுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மகளிர் சுய உதவிக் குழுவினர் பல்வேறு உணவு வகைகளைத் தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளனர்.
கண்காட்சியைப் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். மேலும், வண்ண வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள மலர்களையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள மலர் தோட்டத்தையும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நின்று செல்ஃபி எடுத்து மகிழ்ந்த வண்ணம் உள்ளனர்.
இருப்பினும், பார்வையாளர்களைக் கவரும் வகையில் பெரிய அளவிலான மலர், காய், கனிகள் மூலம் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்கள் எதுவும் இடம்பெறவில்லை. இது பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று தொடங்கிய கண்காட்சி நாளை (பிப்.7) வரை நடக்கிறது.
