Published : 05 Feb 2021 03:17 am

Updated : 05 Feb 2021 08:29 am

 

Published : 05 Feb 2021 03:17 AM
Last Updated : 05 Feb 2021 08:29 AM

மதுரையில் விதிமீறும் ஷேர் ஆட்டோக்களால் மக்கள் அச்சம்

share-auto
மதுரை தமுக்கம் மைதானம் எதிரே மாவட்டக் கல்வி அலுவலகம், பிஎஸ்என்எல் அலுவலகம் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் ஆக்கிரமித்துள்ள ஷேர் ஆட்டோக்கள்.

மதுரை

மதுரையில் எந்த விதிகளையும் பின்பற்றாமல் தாறுமாறாக ஓட்டப்படும் ஷேர் ஆட்டோக்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதைத் தடுக்க வேண்டிய காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது ஏன் எனக் கேள்வி எழுப்புகின்றனர்.

மதுரை நகரில் வாகனங்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. ஐந்தாயிரத்துக்கும் அதிக மானவை ஷேர் ஆட்டோக்கள் என்ற பெயரில் இயங்குகின்றன. நினைத்த இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குவதால் பொதுமக்கள் ஷேர் ஆட்டோக்களில் செல்லப் பெரிதும் விரும்புகின்றனர்.


ஆனால் இந்த ஆட்டோக்களின் விதிமீறல்களுக்குப் பஞ்சமில்லை. நகர் பேருந்துகள் நிறுத்தும் இடங்களில் இந்த ஆட்டோக்களில் பயணிகளை ஏற்று வதிலும் போட்டாபோட்டி நிலவுகிறது. ஷேர் ஆட்டோக்களில் மூன்று பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இருக்கையை விரிவுபடுத்தி 10 பேரை ஏற்றிச் செல்கின்றனர்.

மதுரை அரசு மருத்துவமனை உட்பட முக்கிய சந்திப்புகள், பெரியார், மாட்டுத் தாவணி, ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களுக்கு வெளியில் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை கூவிக்கூவி அழைக்கின்றனர். தல்லா குளம் சிஇஓ, பிஎஸ்என்எல் அலுவலகம் சந்திப்பு போன்ற நகரின் பல்வேறு பகுதிகளில் நகர் பேருந்து உட்பட பிற வாகனங்கள் செல்ல முடியாத அளவு ஆக்கிரமிக்கின்றனர். இதனால் மற்ற வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

இது தவிர அனைத்துச் சாலைகளிலும் ஷேர் ஆட்டோக்களுக்குப் பின்னால் பிற வாகனங்களை ஓட்டிச் செல்ல முடியவில்லை. திடீரென எங்கு நிறுத்துவார்கள் என்பதே தெரியாது. ஆட்டோ ஓட்டுநர்களின் விதிமீறல்களால் விபத்துக்களும் அதிகரித்துள்ளன. மேலும் ஷேர் ஆட்டோக்களின் ஓட்டுநர்கள் மீது ஓட்டுநர் உரிமம், இன்சூரன்ஸ் இல்லாமல் இயக்குவது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளும் கூறப்படுகின்றன.

விதிமீறும் ஆட்டோக்கள் மீது காவல் துறையினர் அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும், அவர்களே வேடிக்கை பார்க்கிறார்களோ என்ற சந்தேகமும் பொதுமக்கள் மத்தி யில் எழுந்துள்ளது. எனவே நகரில் விபத்துகளைக் குறைக்கவும், போக்கு வரத்து நெரிசலைத் தீர்க்கவும் விதி களை மீறும் ஷேர் ஆட்டோக்கள் மீது மாநகர் காவல் ஆணையர் பிரே மானந்த் சின்கா, போக்குவரத்து துணை ஆணையர் சுகுமாறன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் மோகன் கூறியதாவது:

ஒரு காலத்தில் மதுரையில் அரை பாடி மணல் லாரிகளுக்குப் பயந்தோம். தற்போது ஷேர் ஆட்டோக்களுக்குப் பயப்படும் நிலை உள்ளது. ஷேர் ஆட்டோக்களால் மாநகரப் பேருந்து களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள் ளது என்ற புகார் உள்ளது. இருப்பினும் அவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப் படவில்லை. ஷேர் ஆட்டோக்களின் விதிமீறல்களை கண்டுகொள்ளவில்லை என்றால் பெரிய விளைவுகளை மதுரை மக்கள் சந்திக்க நேரிடும். நகரில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மீண்டும் வீடு திரும்புவது நிச்சயமற்ற செயலாக மாறும். காவல், போக்குவரத்து அதிகாரி கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

வழக்கறிஞர் மலையேந்திரன் கூறும் போது, இரு சக்கர வாகனங்களின் விபத்து களுக்கு ஷேர் ஆட்டோக்களே முக்கிய காரணம். இதன் ஓட்டுநர்கள் ஒழுக்கமற்ற முறையில் செயல்படுகின்றனர். பிறரைப் பற்றிக் கவலைப்படாமல் திடீரென பிரேக் போடுவதால் விபத்துகள் நடக்கின்றன. விபத்தில்லா தமிழகம் என அறிவித்தால் மட்டும் போதாது. அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா கூறியதாவது:

2019-ம் ஆண்டைவிட கடந்த ஆண்டு விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளன. 2019-ல் 185 வாகன விபத்துகளில் 183 பேரும், 2020-ல் 75 வாகன விபத்துகளில் 81 பேரும் இறந்துள்ளனர். 2019-ல் 682 வாகன விபத்துகளில் 801 பேரும், 2020-ல் 455 வாகன விபத்துகளில் 487 பேரும் காயமடைந்துள்ளனர்.

நகரில் அடிக்கடி விபத்து நடக்கும் சாலைகளைக் கண்டறிந்து தடுப்புச் சுவர், தற்காலிக வேகத்தடைகள் ஏற்படுத்தியதால் விபத்துகள் குறைக் கப்பட்டுள்ளன. விதிமீறும் ஷேர் ஆட்டோக்கள் மீது தொடர்ந்து நட வடிக்கை எடுக்கப்படுகிறது. இருப்பி னும் ஒவ்வொரு சந்திப்பு, பேருந்து நிறுத்தங்களில் ஷேர் ஆட்டோக்களின் நடவடிக்கை கண்காணிக்கப்பட்டு விதி மீறும் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக் கப்படும். தொடர்ந்து தவறு செய்யும் ஓட்டுநர்களின் உரிமம் ரத்து செய்யப் பரிந்துரைக்கப்படும் என்றார்.


மதுரையில் விதிமீறும் ஷேர் ஆட்டோஷேர் ஆட்டோக்களால் மக்கள் அச்சம்Share auto

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x