Published : 04 Feb 2021 08:11 PM
Last Updated : 04 Feb 2021 08:11 PM

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அரசு கல்விக் கட்டணம்: அரசாணை வெளியீடு

சென்னை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் செவிலியர் கல்லூரிகளில் உள்ளதைப் போன்று குறைக்கப்பட்டுள்ளது.

இதனால், மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கல்லூரிக்குத் திரும்புமாறு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசுத் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓர் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவாகும். இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வருகிறார்.

இதன் ஓர் அங்கமாக 2020-2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று அதனை கடலூர் மாவட்டத்திற்கான அரசு மருத்துவக் கல்லூரியாக அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் தற்போது ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, ராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரிகளை உள்ளடக்கிய அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்வி நிறுவனங்களை 27.01.2021 நாளிட்ட உயர்கல்வி (எச்1) துறை அரசாணை (நிலை) எண் 16-ன் வாயிலாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, ராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் செவிலியர் கல்லூரிகளில் உள்ளதைப் போன்று கல்விக் கட்டணம் செலுத்த நடவடிக்கை மேற்கோள்ளப்பட்டுள்ளது.

அதாவது எம்.பி.பி.எஸ் பாடப் பிரிவிற்கு ரூ.13,610-ம், பி.டி.எஸ் பாடப் பிரிவிற்கு ரூ.11,610-ம், பட்ட மேற்படிப்புகள் பாடப் பிரிவிற்கு ரூ.30,000-ம், பட்ட மேற்படிப்பு பட்டய பாடப் பிரிவிற்கு ரூ.20,000-ம், பி.எஸ்.சி. (செவிலியர்), இயன் முறை மருத்துவம் மற்றும் செயல்முறை மருத்துவம் ஆகிய பாடப் பிரிவிற்கு ரூ.5,000-ம் கல்விக் கட்டணமாக நிர்ணயித்து முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

இக்கட்டணமானது தற்போது பயின்று வரும் மாணவர்களுக்கும் இனி வருங்காலங்களில் இக்கல்லூரியில் பயில உள்ள மாணவர்களுக்கும் பொருந்தும்.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, ராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி ஆகிய மருத்துவ கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ மாணவியர்களின் கோரிக்கையை ஏற்று முதல்வர் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கல்விக் கட்டணம் நிர்ணயித்து ஆணை வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம், அக்கல்லூரி மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. ஆகவே, மேற்காணும் கல்லூரி மாணவர்கள் உடனடியாக தங்களது போராட்டத்தைக் கைவிட்டு கல்லூரிக்குத் திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x