Published : 04 Feb 2021 05:06 PM
Last Updated : 04 Feb 2021 05:06 PM

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,084 கோடி கடனுதவி திட்டம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

மாநிலம் முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,084 கோடி கடனுதவிக்கான காசோலைகளை வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாகத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (4.2.2021) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 20,186 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 1,083.96 கோடி ரூபாய் மற்றும் 317 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு 277.79 கோடி ரூபாய், என மொத்தம் 1,361.75 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் அடையாளமாக, 7 மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் பெறவும், வங்கிகளுடன் வலுவான நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டு வருமானம் ஈட்டக்கூடிய பொருளாதாரத் தொழில்களைத் தொடங்கி நடத்திடவும், அதிக அளவு கடன்களைத் தொடர்ச்சியாகப் பெறவும் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புத் திட்டம் வழிவகை செய்கிறது. இதன் மூலம் பெண்களின் பொருளாதார ஆற்றல் மேம்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19.3.2020 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், 2019-20ஆம் ஆண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 13 ஆயிரத்து 301 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, 2020-21ஆம் ஆண்டு 14 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்தார். ஆனால், அந்த இலக்கினையும் கடந்து இதுவரையில் 15,653.04 கோடி ரூபாய் வங்கிக்கடன் தொகை 3,82,121 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகை, கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட கடன் தொகையினைவிட அதிகமானதாகும்.

மேலும், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் மகளிர் சுய உதவிக்குழுகளுக்கு 48,737.40 கோடி ரூபாய் கடனுதவியாக வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. அரசால் 2011ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு காலத்திற்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 81,582.65 கோடி ரூபாய் வங்கிக் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன், இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பா.ஜோதி நிர்மலாசாமி, இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப., மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்''.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x