Published : 31 Jan 2021 03:14 AM
Last Updated : 31 Jan 2021 03:14 AM

மதிப்பு நீக்கம் செய்த நோட்டுகளை வாங்கிக்கொண்டு சசிகலாவுக்கு சொத்து விற்றவர்கள் மீது பினாமி சட்டத்தில் நடவடிக்கை எடுத்தது சரியே: உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை வாதம்

மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி சசிகலா வாங்கிய சொத்துகளின் உரிமையாளர்கள் மீது பினாமி சட்டத்தில் நடவடிக்கை எடுத்தது சரியே என்று உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை தெரிவித்தது.

புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த 2016 நவம்பரில் அறிவித்தது. மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி வி.கே.சசிகலா பல சொத்துகளை வாங்கியதாக வருமான வரித் துறை குற்றம் சாட்டியது.

குறிப்பாக, மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூ.130 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி சென்னை ஸ்பெக்ட்ரம் மால் வணிக வளாகம் வாங்கப்பட்டது தொடர்பாக அதன் உரிமையாளர்களான கங்கா ஃபவுண்டேஷன், பாலாஜி, விஎஸ்ஜே தினகரன் ஆகியோர் மீது பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரித் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை, நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நடந்தது. அப்போது, ‘‘நிர்ப்பந்தம் காரணமாகவே ஸ்பெக்ட்ரம் மால் வணிக வளாகத்தை விற்பனை செய்தோம். அதற்காக, மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு எங்களது சொத்தை விற்றதற்காக எங்கள் மீது பினாமி சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முடியாது’’ என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அதற்கு வருமான வரித் துறை தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆர்.சங்கரநாராயணன், ‘‘நிதி நெருக்கடி காரணமாகவே ஸ்பெக்ட்ரம் மால் வணிக வளாகத்தை விற்பனை செய்ய அதன் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதற்காக சசிகலாவின் வழக்கறிஞரை அணுகியுள்ளனர். பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்பாக இந்த சந்திப்பு நடந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் மால் வளாகத்துக்கான தொகையை அதன் உரிமையாளர்களுக்கு வழங்க மேற்கொண்ட நடைமுறை, வாங்குபவரின் பெயர் இல்லாமல் ஒப்பந்தங்கள் மேற்கொண்டது போன்ற நடவடிக்கைகள் காரணமாக பினாமி சட்டத்தை பயன்படுத்தியது சரியே’’ என்று வாதிட்டார்.

வருமான வரித் துறை தரப்பு வாதம் முடிவடையாததால், வழக்கு விசாரணையை நீதிபதி வரும் பிப்ரவரி 11-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x