Last Updated : 30 Jan, 2021 04:45 PM

 

Published : 30 Jan 2021 04:45 PM
Last Updated : 30 Jan 2021 04:45 PM

பாஜகவைச் சேர்ந்த நியமன எம்எல்ஏவுக்கு எதிர்ப்பு; உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி அரசின் பரிந்துரையை ஏற்காமல் பாஜகவைச் சேர்ந்த விக்ரமன் நியமன எம்எல்ஏவாக நியமிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்வோம் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (ஜன.30) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''மத்திய அரசு மோட்டார் வாகனச் சட்டத்தில் பல திருத்தங்களைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. அதற்குப் பல மாநிலங்களில் இருந்து எதிர்ப்புக் கிளம்பியது. வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் பல போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால், அதனைப் பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. எதிர்ப்புகளை மீறி திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்தியது. இச்சட்டத்தின் கீழ் அதிகப்படியான அபராதம், தண்டனை விதிப்பதை ஏற்க முடியாது எனப் புதுச்சேரி அரசு சார்பில் பலமுறை மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளோம்.

இதற்கிடையில் அந்தக் கோப்பு, துணைநிலை ஆளுநரின் அழுத்தத்தின் காரணமாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. அதில் சாதாரண குற்றங்களாக இருந்தாலும்கூட ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என அதிகப்படியான அபராதம் இருந்தது. இதைக் குறைக்க வேண்டும் என்று நாங்கள் அந்தக் கோப்புகளில் எழுதி அனுப்பினோம். ஹெல்மெட் சம்பந்தமாகப் புதுச்சேரி மாநில மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நான் உத்தரவிட்டிருந்தேன். அதனைப் போக்குவரத்துறை, காவல்துறையினர் செய்து வருகின்றனர்.

ஆனால், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிகார துஷ்பிரயோகம் செய்து, போக்குவரத்து அதிகாரிகளை நிர்பந்தித்ததன் பேரில் வேறு கோப்பு தயாரிக்கப்பட்டது. பின்பு ஆளுநர் ஒப்புதலுடன், அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அரசாணை வெளியிட்ட பிறகு வேறு வழியற்ற நிலை உருவாகியுள்ளது. இச்சட்டம் தொடர்பாக மக்களுக்கு, அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விழிப்புணர்வு ஏற்படும் வரை இச்சட்டத்தை வேகமாக நிறைவேற்றாமல், படிப்படியாக நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாகத் தலைமைச் செயலரிடம் வலியுறுத்துவேன்.

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்று குறைந்து வரும் சூழலில், அமைச்சரவையில் முடிவெடுத்து, கரோனாவுக்கு முந்தைய வரியில் இருந்து 15 சதவீதத்தை மட்டும் உயர்த்தி, கோப்பினை ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், ஆளுநர் கிரண்பேடி, அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்காமல், மதுபானங்களுக்கான வரியை 100 சதவீதம் உயர்த்தி, வியாபாரம் நடக்கத் தடை ஏற்படுத்தியுள்ளார்.

கரோனா வரியால் மதுக்கடைகளில் வியாபாரம் குறைந்து வருவதால், அரசுக்கான வருமானமும் குறைந்துள்ளது. திட்டமிட்டுப் புதுச்சேரி அரசைப் பழிவாங்கும் நோக்கத்துடன் கிரண்பேடி செயல்பட்டு வருகிறார். இதனால் பாதிக்கப்படுவர்கள் மக்கள்தான். இதனைப் பொதுமக்களும், வியாபாரிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.

புதுச்சேரி சட்டப்பேரவை நியமன உறுப்பினராக இருந்த சங்கர் இறந்ததையடுத்து, இளைஞர் காங்கிரஸ் தலைவரான இளையராஜாவை நியமன உறுப்பினராக நியமிக்கக் கோரி புதுச்சேரி அரசு சார்பில் மத்திய உள்துறைக்குப் பரிந்துரைத்தோம். ஆனால், மத்திய பாஜக அரசு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி அரசின் முடிவை மதிக்காமல், பாஜகவைச் சேர்ந்த விக்ரமனை நியமன உறுப்பினராக நியமித்துள்ளது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடுவோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் பரிந்துரைகளைத்தான் மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். ஆனால், மத்தியில் உள்ள பாஜக அரசு, புதுச்சேரியில் மட்டும் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், தங்களது கட்சியைச் சேர்ந்தவர்களுக்குப் பதவி கொடுத்துள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.''

இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

பாஜகவில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், நாராயணசாமி போட்டியிடும் தொகுதியில் நான் போட்டியிடத் தயார் என்று சவால் விட்டிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு உடனிருந்த அரசு கொறடா அனந்தராமன், ஜெயமூர்த்தி எம்எல்ஏ ஆகியோர் கூறுகையில், ‘‘நமச்சிவாயம் ஏற்கெனவே நின்ற வில்லியனூர் தொகுதியில் பாஜக சார்பில் வெற்றி பெறட்டும். அதன் பிறகு முதல்வரை எதிர்த்துப் போட்டியிடலாம். இதேபோல, பாஜக தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறட்டும், பார்ப்போம்’’ என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x