Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM

சீர்காழியில் தாய், மகனைக் கொன்றுவிட்டு திருடிய நகையில் 4.5 கிலோ தங்கம் மாயம்: போலீஸார் தீவிர விசாரணை

சீர்காழியில் தாய், மகனைக் கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 12.5 கிலோ நகைகள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 4.5 கிலோ நகைகள் எங்கே என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே சாலையில் வசித்து வருபவர் மொத்த நகை வியாபாரி தன்ராஜ்(50). இவரது வீட்டுக்குள் கடந்த 27-ம் தேதி காலை நுழைந்த ராஜஸ்தானைச் சேர்ந்த மணிபால்சிங், ரமேஷ், மணிஸ் ஆகிய 3 கொள்ளையர்கள், தன்ராஜின் மனைவி ஆஷா, மகன் அகில் ஆகியோரைக் கொன்றுவிட்டு, 17 கிலோ தங்க நகைகள், ரூ.6.50 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். மேலும், இந்த சம்பவத்தில் தன்ராஜூம், அவரது மருமகள் நெக்கலும் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்ததால், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நகைகளுடன் தப்பியோடிய கொள்ளையர்களை எருக்கூர் மேலத்தெரு வயல் பகுதியில் போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அப்போது, போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற மணிபால்சிங், போலீஸாரின் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார்.

தொடர்ந்து, ரமேஷ், மணிஸ் ஆகியோர் கொடுத்த தகவலின்பேரில், அவர்களின் மற்றொரு கூட்டாளியான கும்பகோணத்தைச் சேர்ந்த கருணாராம் என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். 3 கொள்ளையர்களையும் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகை மாவட்ட சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், சீர்காழி அரசு மருத்துவமனையில் மயிலாடுதுறை விரைவு நீதிமன்ற நீதிபதி அமிர்தம் முன்னிலையில், திருவாரூர் மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவர் நவீன், மருத்துவர் சிவக்குமார் ஆகியோர் நேற்று மணிபால் சிங்கின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

இந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

நகை மொத்த வியாபாரியான தன்ராஜூம், கொள்ளையர்களும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றுகூட பார்க்காமல் தன் மனைவி, மகனைக் கொன்று, நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன்ராஜ் வேதனையுடன் கூறி வருகிறார்.

ராஜஸ்தானுக்கு அடிக்கடி சென்றுவரும் தன்ராஜ், அங்கு செல்லும்போதெல்லாம் கோயில் விழாக்கள், திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு கணக்கு பார்க்காமல் நிதியுதவி அளித்துள்ளார். இதை அடிக்கடி கவனித்து வந்த கருணாராம், தன்ராஜின் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார்.

கும்பகோணத்தில் செருப்புக் கடை வைத்திருக்கும் கருணாராம் தான், தன்ராஜின் வீட்டில் கொள்ளையடிப்பது குறித்து திட்டம் வகுத்துக் கொடுத்துள்ளார். இந்த கொள்ளை சம்பவத்தில் எதிர்பாராதவிதமாக கொலையும் நிகழ்ந்ததால், கருணாராம் கூட்டாளிகளை விட்டுப் பிரிந்து கும்பகோணத்துக்கு தப்பிச் சென்றுள்ளார்.

இதுதொடர்பாக சீர்காழி காவல் நிலையத்தில் தன்ராஜ் கொடுத்துள்ள புகாரில், வீட்டிலிருந்த 17 கிலோ தங்க நகைகள், ரூ.6.50 லட்சம் கொள்ளை போனதாக தெரிவித்துள்ளார். ஆனால், 12 கிலோ 408 கிராம் நகைகள்தான் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே, மீதியுள்ள நான்கரை கிலோ தங்க நகைகள் எங்கே உள்ளன என்பது குறித்து கருணாராமிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x