Published : 20 Nov 2015 08:12 AM
Last Updated : 20 Nov 2015 08:12 AM

மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட ராணுவம், பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு வீரர்களுக்கு பொதுமக்கள் நன்றி, பாராட்டு

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு வீரர்கள் பல்லாயிரக்கணக்கான மக்களை மீட்டுள்ளனர். அவர்களின் சிறப்பான பணிக்காக பொதுமக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பெய்த தொடர் மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தரைத்தளம் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் ஆயிரக்கணக்கான மக்கள் மொட்டை மாடிகளில் தஞ்சம் புகுந்தனர். குடிநீர், உணவு இல்லாமல் அவதிப்பட்டனர்.

வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்கும் பணியில் தமிழக போலீஸாரும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆனால், வெள்ள பாதிப்பு அதிகமாக இருந்ததால் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அழைக் கப்பட்டனர்.

பேரிடர் மீட்புப் படை

சென்னையில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்த நிலை யில், அப்பகுதியில் உள்ள பொதுமக்களை மீட்பதற்காக ஹைதராபாத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் சென்னை வந்தன. இந்தக் குழுவினர் வில்லிவாக்கம், தாம்பரம், வேளச்சேரி போன்ற பகுதிகளில் சிக்கியிருந்த மக்களை படகுகள் மூலம் பத்திரமாக மீட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர். இப்பணியில் சுமார் 60 வீரர்கள் ஈடுபட்டனர்.

கடலோர காவல் குழுமம்

சென்னை புறநகர் பகுதிகளில் படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணியில் கடலோர காவல் குழுமம் ஈடுபட்டது. குழுமத்தின் ஏடிஜிபி சைலேந்திர பாபு கழுத்தளவு தண்ணீரில் இறங்கி படகுகள் மூலம் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டார். அவருடன் கடலோர காவல்படை வீரர்களும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தீயணைப்புப் படை

சென்னையைச் சேர்ந்த 700 தீயணைப்பு, மீட்புப் படை வீரர்கள், 120 கமாண்டோ படையினருடன் வெளியூர்களில் இருந்து 300 வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். 15 தீயணைப்பு வாகனங்கள், 35 படகுகள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. வீரர்கள் 43 குழுக்களாக பிரிந்து 33 இடங்களில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சுமார் 22 ஆயிரம் பேரை வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து இவர்கள் மீட்டனர்.

ராணுவம்

வெள்ள பாதிப்பு அதிகமாக இருந்ததால் ராணுவ உதவியை தமிழக அரசு கோரியது. இதையடுத்து, சென்னையில் உள்ள ராணுவத்தின் தரைப் படைப் பிரிவு, அரக்கோணத்தில் உள்ள கடற்படையின் ஐஎன்எஸ் ராஜாளி படைப் பிரிவு, தாம்பரத்தில் உள்ள விமானப்படை பிரிவு ஆகியவை உடனடியாக களத்தில் இறங்கின. தரைப் படையினர் படகுகள் மூலம் பொதுமக்களை மீட்டனர்.

தாம்பரம், முடிச்சூர், கோட்டூர்புரம் போன்ற பகுதி களில் மழைநீர் சூழ்ந்திருந்த வீடுகளில் இருந்த பொது மக்களை விமானப்படை மற்றும் கடற்படையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்டனர். மேலும் மொட்டை மாடிகளில் தஞ்ச மடைந்தவர்களுக்கு உணவு, குடிநீர் பாக்கெட்கள் ஹெலிகாப் டர்கள் மூலம் வழங்கப்பட்டன.

காவல் துறை

சாலைகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து போலீஸாரோடு சட்டம் - ஒழுங்கு போலீஸாரும் ஈடுபட்டனர். கொட்டும் மழையிலும் ரெயின்கோட் அணிந்துகொண்டு அவர்கள் பணியாற்றினர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் போலீஸார், அதிரடி படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளை 24 மணி நேரமும் கண்காணித்து பலவீனமான பகுதிகளில் உடைப்பு ஏற்படாத வாறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

தனியார் அமைப்புகள்

சென்னை புறநகர் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களை மீட்கும் பணியில் பல்வேறு தனியார் நிறுவனங்கள், தொண்டு அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஈடுபட்டன.

தனியார் கால் டாக்ஸி நிறுவனமான ‘ஓலா’, இலவச படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது. ஐ.டி. நிறுவனங்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டன. அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களையும் விநி யோகித்தனர்.

ஆபத்தான சூழ்நிலையில் துரிதமாக செயல்பட்டு பல ஆயிரக்கணக்கானவர்களை மீட்டதுடன் அவர்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை விநியோகித்த ராணுவத்தின் முப்படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தமிழக காவல்துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் தனியார் நிறுவனங்ளுக்கு பொதுமக்கள் நன்றியுடன் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x