Published : 29 Jan 2021 03:13 AM
Last Updated : 29 Jan 2021 03:13 AM

இன்னும் ஒரு வாரத்தில் புதிய கட்சி தொடங்கி பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன்: அர்ஜுனமூர்த்தி அறிவிப்பு

இன்னும் ஒரு வாரத்தில் புதிய கட்சி தொடங்கிதேர்தலில் போட்டியிட இருப்பதாக ரஜினிகாந்த் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட அர்ஜுனமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த டிச. 3-ம் தேதி தனிக் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த ரஜினிகாந்த், தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பாஜக அறிவுஜீவிகள் பிரிவு மாநிலத் தலைவராக இருந்த அர்ஜுன மூர்த்தியை அறிவித்தார். ஆனால், உடல்நலம் பாதிப்பு காரணமாக தனிக் கட்சி தொடங்கப் போவதில்லை என்று கடந்த டிசம்பர் 29-ம் தேதி ரஜினி அறிவித்தார்.

இந்நிலையில், தனிக் கட்சி தொடங்கப் போவதாக அர்ஜுனமூர்த்தி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

தமிழகத்தில் மொத்தமுள்ள 6 கோடிக்கும்அதிகமான வாக்காளர்களில் 4 கோடிக்கும் அதிகமானோர் 40 வயதுக்கும் குறைவானவர்கள். அவர்கள் அனைவரும் அரசியல், சமூக மாற்றத்தை விரும்பக் கூடியவர்கள். பழமைவாதத்தை ஏற்காதவர்கள். எனவே, இன்னும் ஒரு வாரத்தில் புதிய சிந்தனைகளுடன், புதிய அரசியல் கட்சி தொடங்க இருக்கிறேன். நான் தொடங்கும் கட்சி பாஜகவுக்கு மாற்றாகவே இருக்கும்.

ரஜினி ரசிகர்கள் என் கட்சியில் இணையலாம்

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவோம். கட்சி தொடங்குவதற்கான பணிகளைமேற்கொண்டு வருகிறேன். கட்சி தொடக்க விழாவில் கொள்கையை தெளிவாக அறிவிப்பேன். நடிகர் ரஜினிகாந்த் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன். உடல்நிலை காரணமாக கட்சி தொடங்குவதில்லை என்ற அவரது முடிவை மதிக்கிறேன். எனது கட்சிக்காக ரஜினிகாந்தின் பெயர், படத்தை பயன்படுத்த மாட்டேன். ரஜினியின் வாசகங்களைக்கூட பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.

ரஜினிகாந்தின் மனம் புண்படும்படி எதையும் நான் செய்ய மாட்டேன் என்று அவரது ரசிகர்களுக்கு உறுதி அளிக்கிறேன். என் மீது நம்பிக்கைஉள்ள ரஜினி ரசிகர்கள் எனது கட்சியில் இணையலாம்.

பெரியார் சித்தாந்தம் இப்போது சரிந்து கொண்டிருக்கிறது. பெரியார் சித்தாந்தம் வலிமையாக இருந்திருந்தால் வேல் எடுப்பதெல்லாம் நடந்திருக்காது. பாஜகவில் இருந்தபோது கட்சி வளர்ச்சிக்காக, மக்கள் நலனுக்காக புதிய புதிய ஆலோசனைகளை வழங்கினேன். அதுபோன்ற புதிய சிந்தனைகளுடன் புதிய கட்சியை வளர்த்தெடுப்பேன். அனைத்து மதங்கள், சாதிகளை ஒருங்கிணைத்துச் செல்வதே எனது கட்சியின் நோக்கமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x