Published : 25 Jun 2014 07:23 PM
Last Updated : 25 Jun 2014 07:23 PM

தமிழக மீனவர்கள் 46 பேர் விடுதலை: காவல் முடியும் முன்னரே விடுவிப்பு

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 46 தமிழக மீனவர்கள் நீதிமன்றக் காவல் முடியும் முன்னரே புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த ஜூன் 22-ம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 6 விசைப்படகுகளில் இருந்த புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 24 பேரும், ஜூன் 23-ம் தேதி 5 விசைப்படகுகளில் சென்ற ராமேசுவரம் மீனவர்கள் 22 பேரும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். மேலும் ராமேசுவரம் மீனவர் எமர்சன் என்பவரின் விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி மூழ்கடித்தனர்.

சிறைப்பிடிக்கப்பட்ட கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 24 பேரையும் ஜூலை 2-ம் தேதி வரையில் ஊர்காவல்துறை நீதிமன்றக் காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. அதுபோல ராமேசுவரம் மீனவர்கள் 22 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜூன் 27-ம் தேதி வரையில் அனுராதபுரம் நீதிமன்றத்தில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் புதன்கிழமை இலங்கை சட்ட அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் நீதிமன்றக் காவல் முடியும் முன்னரே கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 24 பேரும் ராமேசுவரம் மீனவர்கள் 22 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் மீனவர்களின் 11 விசைப்படகுகளையும் இலங்கை நீதிமன்றங்கள் விடுவிக்க மறுத்துவிட்டன.

மேலும் நாகப்பட்டினம் மாவட் டத்தைச் சேர்ந்த 7 மீனவர்களும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்களும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வர் கடிதம்

மீனவர்கள் கைது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியிருந்தார். அதில் “இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட அவர்களுடைய படகுகளையும் மீட்டுத்தர வேண்டும். இரு நாட்டு மீனவர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை சார்பில் இலங்கை அரசுக்கு நெருக்குதல் அளித்ததாகக் கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாகவே மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x