Published : 28 Jan 2021 06:58 PM
Last Updated : 28 Jan 2021 06:58 PM

மக்கள்தொகை அடிப்படையில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு: பாமக தலைவர் ஜி.கே.மணி கோரிக்கை

மக்கள்தொகை அடிப்படையில் எம்பிசி பிரிவில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கோரிக்கை வைத்துள்ளார்.

வேலூரில் பாமக தலைவர் ஜி.கே.மணி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ‘‘தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் பாமக, வன்னியர் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டம் நாளை (ஜன.29) நடைபெறுகிறது. இதுவரை 5 கட்டப் போராட்டம் நடந்துள்ளது. நாளை 6ஆம் கட்டமாக மாறுபட்ட போராட்டமாக அமைய உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளில் இருக்கும் வன்னியர்கள் அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளின் கரை வேட்டி, கொடிகளுடன் பங்கேற்க உள்ளனர். எம்பிசி இட ஒதுக்கீட்டில் அதிக மக்கள்தொகையுடன் வன்னியர்கள் இருக்கும் நிலையில், அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் குறைந்த இட ஒதுக்கீடு கிடைக்கிறது.

வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கேட்டோம். இப்போது, எம்பிசி பிரிவில் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுள்ளார். இதை அரசு நிறைவேற்றக் காலம் தாழ்த்தக்கூடாது. இது சமூக நீதிக்கு இழைக்கும் அநீதியாகும். ராமதாஸின் 40 ஆண்டுகாலப் போராட்டம் இது. அவரது போராட்டத்தால்தான் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று தனி இட ஒதுக்கீடு உருவானது.

தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு பிசி, எம்பிசி என இரண்டு தொகுப்பாக உள்ளது. ஆனால், கேரளாவில் 8, கர்நாடகாவில் 5, ஆந்திராவில் 6 தொகுப்புகளாக உள்ளன. இதன் மூலம் எல்லாச் சமூக மக்களுக்கும் இட ஒதுக்கீடு பரவலாகச் செல்கிறது.

சமூக நீதியின் பிறப்பிட மாநிலமான இங்குதான் இவ்வளவு பெரிய குளறுபடி இருக்கிறது. ராமதாஸின் கோரிக்கை உள் ஒதுக்கீடு வழங்குவதுதான். இதனால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. எம்பிசி பிரிவில்தான் உள் ஒதுக்கீடாகக் கேட்கிறோம் என்பதால் தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் அளிக்க வேண்டும்.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு இல்லாத நிலையில், பாமக கூட்டணியில் இருக்கும்போது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்டது. இந்திய அளவில் ஓபிசி இட ஒதுக்கீடு பெறுவதற்கும் ராமதாஸ் காரணம். அன்புமணி ராமதாஸ் அமைச்சராக இருந்தபோது மருத்துவப் படிப்பில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை அறிமுகம் செய்தார். இதன் மூலம் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் எல்லாச் சமுதாய மக்களுக்கும் இட ஒதுக்கீடு பெற வழி செய்தனர். இனியும் காலம் தாழ்த்தினால் வேறு விதமாக அமையும்.

திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஜீவாதாரமான பாலாறு வறண்ட ஆறாக மாறிவிட்டது. பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். பாலாற்றில் தமிழக உரிமையைப் பறிக்கும் ஆந்திர அரசின் நடவடிக்கையை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்தல் வறட்சிக் காலத்தில் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க கோதாவரி-காவரி நதிகள் இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.

பாமகவின் இட ஒதுக்கீடு போராட்டத்தில் ராமதாஸ் முழுக்கவனம் செலுத்தி வருகிறார். கூட்டணி தொடர்பாக வரும் 31ஆம் தேதி நிர்வாகக் குழுக் கூட்டம் கூடுகிறது. இதில், கூட்டணி தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் முடிவு எடுக்க அனுமதி அளிக்கப்படும்’’.

இவ்வாறு ஜி.கே.மணி தெரிவித்தார்.

அப்போது மாநில துணை பொதுச் செயலாளர் கே.எல்.இளவழகன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் என்.டி.சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x