Published : 30 Jun 2014 11:08 AM
Last Updated : 30 Jun 2014 11:08 AM

மவுலிவாக்கம் விபத்துக்கு காரணமானவர்களை தண்டிக்க தலைவர்கள் கோரிக்கை

இடிந்து விழுந்த கட்டிடத்தை கட்டிய நிறுவனம் மற்றும் அனுமதி வழங்கிய அரசுத் துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டுமென்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்

கட்டிடத்தை கட்டும் முன் கட்டும் இடம், மண்ணின் தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் எந்த ஆய்வும் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. உயிரிழப்பு, பொருட்சேதம் ஆகியவற்றின் விளைவுகள் மிகக் கடுமையானவை. கட்டுமானப் பணிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை தமிழக அரசு உறுதி செய்ய உரிய வழிமுறைகளையும் ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் பெற பணம் கொடுத்தோருக்கு, அவர்களின் பணத்தை திருப்பித்தர உரிய ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும். விபத்துக்கு காரணமான அதிகாரிகளும், நிறுவனமும் உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்த விபத்து குறித்து விசாரிக்கவும், எதிர்காலத்தில் விபத்துகள் நடைபெறா மல் தடுப்பதற்கும் ஆலோசனை வழங்குவதற்கும் பதவியில் உள்ள நீதிபதியை கொண்டு விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

இடிந்து விழுந்த கட்டிடம் ஏற்கெனவே ஏரியாக இருந்த பகுதியில் கட்டப்பட்டுள்ளது. 11 மாடிகளை தாங்கும் வகையில் நிலத்தின் தன்மை இல்லை என்று சொல்லப்படுகிறது.

கட்டிட அனுமதியைக் கூட கடந்த 2013-ம் ஆண்டு ஜூனில்தான் சி.எம்.டி.ஏ. வழங்கியுள்ளது. 11 மாடி கட்டுவதற்கு நகர்ப்புற மேம்பாட்டு அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும். இப்பிரச்சினையில் இருந்து தப்பிக்க சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் கட்டுமான நிறுவனத்தை குறை கூறுகிறார்கள்.

இதில் விதிமீறல் நடைபெற்றுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த கட்டிடத்துக்கு அனுமதி கொடுத்த உயர் அதிகாரிகளும், அதிகார வர்க்கத்தினரும் தப்பித்து விடக்கூடாது. தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

ஏரிப் பகுதியில் அடுக்ககம் கட்டப்படும்போது, உறுதியான அடித்தளம் அமைக்கப்படவில்லை. மணல், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் தரமற்றவையாக இருந்திருக்கின்றன என்று இடத்தை பார்வையிட்ட கட்டுமான நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

திட்ட அனுமதி பெறும்போது, கட்டுமான நிறுவனம் அளிக்கும் வரைபடம், நிலத்தின் தன்மை மற்றும் மண் பரிசோதனை அறிக்கைகளை சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் அப்படியே ஏற்றுக்கொள்கின்றனர். தொழில்நுட்ப நிபுணர்களையும் கொண்டு மதிப்பிடப்படுவதில்லை. இதற்கு பயிற்சிபெற்ற தொழில்நுட்ப பணியாளர்களும் சி.எம்.டி.ஏ.வில் இல்லை என்று கூறப்படுகிறது.

விபத்துக்கு காரணமானவர்கள், அனுமதி அளித்தவர்கள், விதிமுறைகளை அலட்சியப்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

மவுலிவாக்கம் கட்டிட விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவரும் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை மவுலிவாக்கத்தில் கட்டுமானப் பணி நடந்துவந்த 11 மாடிக் கட்டிடம் சனிக்கிழமை மாலை இடிந்து தரைமட்டமானது. பலர் பலியாயினர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது. இடிபாடுகள் மற்றும் மீட்புப் பணிகளை மத்திய கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொது நிறுவனங்கள் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை காலை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கட்டிட விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் நலம்பெற வேண்டும். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.

கட்டிடம் இடிந்து விழ காரணமாக இருந்தவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் இருக்க, புதிய கட்டிடங்கள் கட்டும்போதே அவற்றை முறையாக பரிசோதிக்கவும், அதன் நிலை குறித்து அறியவும் அரசு முயற்சி எடுக்க வேண்டும்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி

கட்டிடம் இருந்த இடம் ஏரிப்பகுதி என்று தெரிகிறது. கட்டிடத்தின் அடித்தளம் உறுதியாக அமைக்கப்படாததே கட்டிடம் சரிய காரணம் என கூறப்படுகிறது. இதற்கு அந்த கட்டுமான நிறுவனமும், கட்டுமானப் பணிகளை உரிய ஆய்வு செய்யாமல் அனுமதி கொடுத்த அதிகாரிகளே முக்கிய காரணம்.

அங்கு பணி செய்த தொழிலாளர் களுக்கு உரிய தங்குமிடம் அளிக்காமல், கட்டுமான இடத்துக்குள் தங்கவைத்ததே உயிர் இழப்பு அதிகரிக்க காரணம்.

மீட்பு பணியை பார்வையிட்ட ஜி.கே.வாசன்

மீட்பு பணிகள் நடைபெறுவதை பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், மனித நேய மக்கள் கட்சி எம்எல்ஏ ஜவாஹிருல்லா, பூவை.ஜெகன் மூர்த்தி உட்பட பல அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் பார்வையிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x