Published : 26 Jan 2021 16:47 pm

Updated : 26 Jan 2021 16:47 pm

 

Published : 26 Jan 2021 04:47 PM
Last Updated : 26 Jan 2021 04:47 PM

கட்சியை விட்டு யார் வெளியேறினாலும் காங்கிரஸை அசைக்க முடியாது: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

whoever-leaves-the-party-cannot-shake-congress

புதுச்சேரி

கட்சியை விட்டு யார் வெளியேறினாலும் காங்கிரஸை அசைக்க முடியாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்தும், மத்திய அரசு அவரைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் கடந்த 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை அண்ணா சிலை அருகே காங்கிரஸார் தர்ணா போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து 26-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கிரண்பேடியைத் திரும்பப் பெறக் கோரி கையெழுத்து இயக்கத்தை மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் சார்பில் இன்று தொடங்கினர்.


இதன் தொடக்க விழா அண்ணாசிலை அருகே நடந்தது. மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினார்.

முதல்வர் நாராயணசாமி முதல் கையெழுத்திட்டு இயக்கத்தைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

''தான் செய்வது தவறு என கிரண்பேடி உணர்ந்துள்ளார். இதனால்தான் தனக்கு 3 அடுக்குப் பாதுகாப்பு, துணை ராணுவத்தை வரவழைத்துள்ளார்.

ராஜினாமா செய்து காங்கிரஸிலிருந்து வெளியேறிய அமைச்சர் நமச்சிவாயம், நான் சுதந்திரமாக அமைச்சர்களைச் செயல்படவிடவில்லை, மத்திய அரசு மற்றும் கிரண்பேடியோடு இணக்கமாகச் செயல்படவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார். எனது அமைச்சரவையில் சக அமைச்சர்களின் எந்தக் கோப்பையும் நான் நிறுத்தியது இல்லை. நமச்சிவாயம் நேரில் வந்து கோப்புக்கு கையெழுத்து பெற்றுச் செல்வார். எந்தக் கோப்பை நிறுத்தினேன் என ஆதாரத்துடன் அவர் சொல்ல வேண்டும். ஆதாரமில்லாமல் எதையும் பேசக்கூடாது.

ஆளுநருக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆறு நாட்கள் நடந்த போராட்டத்தில் நமச்சிவாயம் பங்கேற்றார். இலவச அரிசிக்கு எதிராக நான் நீதிமன்றம் சென்றதுபோல, மாநிலத் தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு எதிராக நமச்சிவாயம் நீதிமன்றத்துக்குச் சென்றார். அவர் கட்சித் தலைவராக இருந்தபோது மோடி, அமித் ஷாவைக் கடுமையாக விமர்சித்தார். இதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது.

யார் நம்மை விட்டு வெளியேறினாலும் காங்கிரஸ் கட்சியை அசைக்க முடியாது. மதச்சார்பற்ற அணிதான் வலுவான அணி. சிலர் ஓடிக்கொண்டேதான் இருப்பார்கள். நிலையாக இருப்பவர்கள் என்றும் நம்மோடு இருப்பார்கள். நாளுக்கு நாள் சட்டையை மாற்றிக்கொண்டிருப்பவர்களை மக்கள் கவனித்து வருகின்றனர்.

தமிழகத்தில் மதச்சார்பற்ற கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார். மதச்சார்பற்ற கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதனைப் பேசித் தீர்த்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்".

இவ்வாறு நாராயணசாமி குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸார், இந்தியக் கம்யூனிஸ்ட், சிபிஎம், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் எனப் பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர். காங்கிரஸ் மீதான அதிருப்தியில் கூட்டணிக் கட்சி திமுக பல கூட்டங்களைப் புறக்கணித்து வருகிறது. தற்போதும் திமுகவினர் யாரும் இக்கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. அதே நேரத்தில் திமுகவினர் படங்களைப் பதாகைகளில் வைத்திருந்தனர்.

தவறவிடாதீர்!


காங்கிரஸ்பாஜகமத்திய அரசுநாரயணசாமிதிமுகதேர்தல்Whoever leaves the party cannot shake Congress

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x