Published : 26 Jan 2021 03:19 AM
Last Updated : 26 Jan 2021 03:19 AM

காங்கிரஸின் அன்பை பெற்றவர்கள் நாங்கள்: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கருத்து

கமல்ஹாசன்

சென்னை

காங்கிரஸ் கட்சியின் அன்பை பெற்றவர்கள் நாங்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

கமல்ஹாசன் நேற்று காணொலி வாயிலாக உள்ளாட்சிகளுக்கான உறுதிமொழிகளை வெளியிட்டார்.

கிராமப்புற உள்ளாட்சிக்கான 7 உறுதிமொழிகளில், பஞ்சாயத்துகளின் 3 அடுக்குகளுக்கும் நிதி திரட்டப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி, செயல்பாடுகள் மற்றும் செயல்பாட்டாளர்கள் கிடைக்கச் செய்தல், உள்ளாட்சிப் பிரதிநிதியை திரும்பப் பெறும் உரிமை கிராமசபைகளுக்கு கொடுக்கப்படும் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சிக்கான 7 உறுதிமொழிகளில், ஒருங்கிணைந்த தமிழ்நாடு நகர்ப்புற உள்ளூர் தன்னாட்சி சட்டம் இயற்றப்படும், நகர்ப்பகுதிகளில், குறிப்பாக சென்னையில் வெள்ளத்தின் தாக்கத்தை தடுக்க, சிங்கப்பூரில் இருப்பதுபோல நிரந்தர தீர்வுகள் உலகத் தரத்தில் செயல்படுத்தப்படும் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

பின்னர், காணொலி வாயிலாக செய்தியாளர்களிடம் கமல் பேசினார். அவர்களது கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

பேரவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் உள்ளாட்சிகள் குறித்து பேசுவதன் நோக்கம் என்ன?

ஜனநாயகத்தில் கிராமசபை முக்கியமானது. கிராம சுயராஜ்ஜியம் பற்றி காந்தி பேசினார்‌. அடுத்த தலைமுறையாக ராஜீவ் காந்தியும் பேசினார். நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் சட்டங்கள் இயற்றினாலும், அதை நடைமுறைப்படுத்துவது உள்ளாட்சி அமைப்புகளின் கையில்தான் உள்ளது. சட்டப்பேரவையின் மாடல்தான் கிராம சபை. சீரமைப்போம் என்பது எல்லாவற்றையும் தான்.

யாருடன் கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளது?

எங்களது நகர்வுகள் கூட்டணியை நோக்கி அல்ல. மக்களை நோக்கிதான். நல்லவர்களுடன்தான் எங்கள் கூட்டணி. அதுமட்டுமின்றி அரசியலில் அவர்கள் வல்லவர்களாகவும் இருக்க வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கூட்டணிக்கு உங்களை அழைக்கிறார். இதுகுறித்து உங்கள் பதில் என்ன ?

என் தந்தை காங்கிரஸ்காரர். நாங்களும் காங்கிரஸின் அன்பை பெற்றவர்கள்தான். காங்கிரஸுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைக்குமா என்று சொல்லக்கூடிய நேரம் இதுவல்ல. அதிமுக, திமுகவுக்கு மாற்றாக மக்கள் புதிய மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அதனால், யாருடன் கூட்டணி வைப்போம் என்பது குறித்து விரைவில் அறிவிப்போம்.

ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பது குறித்து என்ன முடிவு எடுத்துள்ளீர்கள் ?

அவரது மன்றத்தில் இருப்பவர்கள் எந்த கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று ரஜினி ஏற்கெனவே கூறிவிட்டார். அதுபோதும், மிச்சத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

அதிமுக, திமுகவுக்கு மாற்றாக மக்கள் புதிய மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x