Published : 07 Nov 2015 11:11 AM
Last Updated : 07 Nov 2015 11:11 AM

எனது பாதை வித்தியாசமானது: விஜயகாந்த்

'தமிழக மக்கள் விரைவில் எங்களுக்கு மிகப் பெரிய வெற்றி வாய்ப்பை அளிப்பார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்'

2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் வெகு சில மாதங்களே இருக்கும் நிலையில் தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. தேர்தல் காலத்தில் அதிகம் கவனிக்கப்படும் ஒரு அரசியல் கட்சித் தலைவராக விஜயகாந்த் இருக்கிறார். அவர் தி இந்து-வுக்கு (ஆங்கிலம்) அளித்த பிரத்யேக பேட்டியில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுகவுடன் நிச்சயமாக கூட்டணி அமைக்கப்போவதில்லை எனக் கூறியிருக்கிறார். அதேபோல், பாமகவையும் சரமாரியாக விமர்சித்து வருகிறார். இதனால், இவற்றிற்கு மாற்றாக ஓர் அணியை தலைமை ஏற்று நடத்துவேன் என்பதை விஜயகாந்த் சூசகமாக தெரிவித்திருக்கிறார்.

பேட்டி விவரம்:

தி இந்து: அரசியலில், தேமுதிக 10 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. கடந்த மக்களவை தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பின்னர் கட்சியின் நிலையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

விஜயகாந்த்: அதிமுக, திமுக என்ற இரண்டு திராவிட கட்சிகளும் தமிழகத்தில் மாறி, மாறி அரை நூற்றாண்டுக்கு மேல் ஆட்சி செலுத்திவிட்டன. இந்த நிலையில் மக்கள் தேமுதிகவையே ஒரு ஆக்கபூர்வ மாற்றாகப் பார்க்கின்றனர். காரணம், எங்கள் மீது ஊழல் கறை இல்லை. தமிழகத்தில் அதிமுக, திமுகவுடன் கூட்டணி அமைக்காமல் எங்களைத் தவிர வேறு எந்த கட்சியாவது 10% வாக்கு வங்கியை வைத்திருக்கிறது என்று உங்களால் சொல்ல முடியுமா? இது மக்கள் எங்களுக்கு அளித்து வரும் ஆதரவின் வெளிப்பாடு. தமிழக மக்கள் விரைவில் எங்களுக்கு மிகப் பெரிய வெற்றி வாய்ப்பை அளிப்பார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.

தி இந்து: 2005-ல் அதிமுக, திமுகவுக்கு எதிராக தேமுதிகவை நீங்கள் நிறுவியபோது, உங்கள் முக்கிய இலக்கு என்னவாக இருந்தது? 2011-ல் ஏன் நிலைப்பாட்டில் மாற்றம் செய்தீர்கள்?

விஜயகாந்த்: அப்போது தமிழகத்தில் நிலவிய சூழலை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழகம் திமுகவின் ஊழல் ஆட்சியில் சிக்குண்டு கிடந்தது. ஆட்சி துஷ்பிரயேகம் கொடி கட்டிப் பறந்தது. கட்சிக்காரர்கள் அட்டகாசம் செய்து கொண்டிருந்தனர். அத்தகைய சூழலில்தான் நான் எனது கட்சிக்காரர்களுடன் சேலத்தில் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினேன். திமுகவை ஆட்சியில் இருந்து இறக்க அதிமுகவுடன் கைகோக்க வேண்டும் என தொண்டர்கள் என்னிடம் வலியுறுத்தினர். அதன்படி முடிவெடுத்தேன். எங்கள் லட்சியமும் நிறைவேறியது. நாங்கள் எப்போதுமே, திமுக - அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் சமமான எதிரியாகவே பார்க்கிறோம். 2011-ல் இரண்டு திராவிடக் கட்சிகளில் ஒரு எதிரியை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என முடிவெடுத்தோம். அதனால், அதிமுகவுடன் இணைந்தோம். இருப்பினும், அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத பொழுது நாங்கள் சட்டப்பேரவையில் எதிர்ப்பைத் தெரிவித்தோம்.

தி இந்து: 2011-ல் நீங்கள் எடுத்த முடிவு உங்களுக்கு எதிராக அமைந்துவிட்டதாக எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? 2014-ல் உங்கள் வாக்கு வங்கி சரிந்திருக்கிறதே..

விஜயகாந்த்: எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலர் அதிமுகவால் ஈர்க்கப்பட்டனர் என்பது உண்மையே. ஆனால், என் கட்சித் தொண்டர்கள் இன்னமும் என்னுடனேயே இருக்கின்றனர். எனது மாவட்டச் செயலாளர்களை அதிமுகவால் கவர முடியவில்லை. நாங்கள் வலுவிழந்துவிட்டோம் என்றால் எதற்காக தேமுதிகவை அதிமுகவினர் அடிக்கடி குறிவைக்கின்றனர். இதுவே, தேமுதிகவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நற்சான்று. எங்களது வாக்கு வங்கி ஸ்திரமாகவே இருக்கிறது.

தி இந்து: அதிமுக அமைச்சர்கள் தமிழக அரசு கொண்டுவந்த நலத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பிரச்சாரம் செய்கின்றனரே..

விஜயகாந்த்: ஆமாம். நாங்கள் லேப்டாப் கொடுத்திருக்கிறோம். ஆடு, மாடு கொடுத்திருக்கிறோம் என்றெல்லாம் பிரச்சாரம் செய்கின்றனர். நாங்கள் தமிழக அரசிடம் ஒரு விஷயத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அரசு இத்தனை ஆண்டுகளில் ஏற்படுத்தித் தந்த வேலைவாய்ப்பு என்னவென்று வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யுமாறு கூறி வருகிறோம். இந்த கேள்விக்கு அரசு இதுவரை பதில் தரவில்லை. இதில் அவர்களுக்கு என்ன தயக்கம் இருக்கிறது? சட்டம், ஒழுங்கு பிரச்சினையை எடுத்துக் கொள்வோம். உயர் நீதிமன்ற பாதுகாப்புக்கு மத்திய படை அமர்த்தப்பட்டுள்ளது. இது மாநில காவல் துறை குறித்து சொல்வது என்ன? நாமக்கல் யுவராஜ் பிரச்சினையில் என்ன நடந்தது என்பதை நாம் அனைவருமே பார்த்தோம். இரண்டு கட்சிகளுமே விமர்சனங்களை ஏற்க தயாராக இல்லை. ஜெயலலிதா தன்னை விமர்சிப்பவர்களை நேரடியாக ஒடுக்குவார். ஆனால், கருணாநிதி முதலில் ஆரத் தழுவி அரவணைத்து பின்னர் எதிர்ப்பை காட்டுவார்.

தி இந்து: அதிமுகவை மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சிக்கிறாரே..

விஜயகாந்த்: ஸ்டாலின் தனது பயணத்தைத் தொடங்கும்போதே, 'நாங்கள் கடந்த காலங்களில் செய்த தவறுகளுக்கு மன்னியுங்கள்' என்றுதான் ஆரம்பித்தார். இதில் இருந்தே திமுக கடந்த காலங்களில் ஊழலில் ஈடுபட்டதை அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். நீங்கள் இருக்கும் கட்சியே ஊழலில் திளைத்திருக்கும்போது உங்களால் எப்படி மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அவர்கள் கைகளில் மீண்டும் ஆட்சி கிடைத்தால் பழங்கதை தொடர்கதையாகும். நடைபயணம் மேற்கொள்வது போன்ற அனைத்துவிதமான நாடகங்களும் தேர்தல் நெருக்கத்தில் நடைபெறுவது வழக்கமான ஒன்றே. புதைகுழியில் கால் வைத்தால் மண்ணோடு மண்ணாக புதைந்து போவோம். திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவது புதைகுழியில் கால் வைப்பது போன்றதே.

தி இந்து: கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என ஸ்டாலின் கூறியுள்ளாரே?

விஜயகாந்த்: கூட்டணி விவகாரத்தில் திமுகவின் போக்கு ஏற்புடையதல்ல. திமுக ஏதோ உயர்ந்த பீடத்தில் அமர்ந்து கொண்டிருப்பதைப் போலவும் பிற கட்சிகள் அவர்களிடம் வந்து கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறது. திமுக ஏன் ஒருமுறையாவது இறங்கி வரக்கூடாது. தேமுதிகவை அவர்கள் விட்டுவிடட்டும். மற்ற கட்சிகளிடம் கூட்டணிப் பேச்சுவார்த்தையை இறங்கி வந்து பேசலாமே. ஏனென்றால் தேமுதிக ஒரு வித்தியாசமான பாதையை தேர்வு செய்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதி மீதே எங்களுக்கு நம்பிக்கை இல்லாதது போது நாங்கள் எப்படி ஸ்டாலினை நம்புவோம். தேமுதிக இரண்டு திராவிடக் கட்சிகளையுமே எதிர்க்கிறது. தமிழகத்தில் நிச்சயம் மாற்றத்தைக் கொண்டு வருவோம். இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

தி இந்து: தேமுதிக இன்னமும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருப்பதாக பாஜக கூறிவருகிறதே. உங்கள் நிலையை தெளிவுபடுத்த முடியுமா?

விஜயகாந்த்: நாங்கள் இப்போதைக்கு எந்த ஒரு கூட்டணியிலும் இல்லை. அதே வேளையில் எந்தக் கூட்டணியில் சேர வேண்டும் என்பதையும் இப்போதைக்கு நான் முடிவு செய்யவில்லை. திமுக, அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறோம். இப்போதைக்கு இதுவே எங்கள் நிலைப்பாடு.

தி இந்து: மக்கள் நல கூட்டியக்கத்தின் அழைப்புக்கு உங்கள் பதில் என்ன?

விஜயகாந்த்: மக்கள் நல கூட்டியக்கத்துக்கு எனது நன்றி, வாழ்த்துகள். அவர்கள் என்னுடன் கூட்டணி தொடர்பாக பேசினார்கள். ஆனால், முடிவெடுப்பதற்கு இன்னும் சில காலம் தேவைப்படுகிறது.

தி இந்து: அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஆதரிப்பவர்களுடன் மட்டுமே கூட்டணி என பாமக கூறியுள்ளதே. இதில் உங்கள் கருத்து என்ன?

விஜயகாந்த்: கடந்த மக்களவை தேர்தலின்போது பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகனை (அன்புமணி ராமதாஸ்) தவிர வேறு யாரையும் ஆதரித்து பிரச்சாரம் செய்யவில்லை. ஆனால், நாங்கள் எங்கள் கட்சி பிரமுகர்களை கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அனுப்பினோம். பாமகவுக்கு கூட்டணி தர்மம் பற்றி பேசும் தகுதி இல்லை. அதுவும் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கோரிக்கையை எப்படி அவர்கள் முன்வைக்கிறார்கள்.

தி இந்து: தலித் அல்லாத சமூகத்தினர் சார்ந்த கட்சிகளை ஒன்றிணைப்போம் என்ற பாமகவின் பிரச்சாரம், தமிழகத்தை சாதி அடிப்படையில் பிரித்திருக்கிறதா?

விஜயகாந்த்: தேமுதிக ஒருபோதும் சாதி அரசியல் செய்யாது. எங்களுக்கு அனைவரும் சமமானவர்களே. சாதியை பொருத்தவரை பெரியார் கொள்கையை நாங்கள் பின்பற்றுகிறோம். இன்று, பல்வேறு கட்சிகளும் பெரியார், அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்தி அரசியல் செய்கின்றனர். ஆனால், பெரியார், அம்பேத்கர் கொள்கையை சிறிதும் பின்பற்றுவதில்லை.

தமிழில்: பாரதி ஆனந்த்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x