Published : 25 Jan 2021 03:14 AM
Last Updated : 25 Jan 2021 03:14 AM

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஸ்டாலின் பிரச்சார பயணம் இன்று அறிவிப்பு

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரப் பயணத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்.

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரலில் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

நேற்று முன்தினம் கோவையில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய காங்கிரஸ் முன்னாள்தலைவர் ராகுல் காந்தி கோவை,திருப்பூர் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார். நேற்று திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார்.

இன்று கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்கிறார். வரும் 30-ம்தேதி மதுரையில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பங்கேற்கிறார். அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முதல்வர் பழனிசாமி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இணையவழியில் பிரச்சாரம் செய்து வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த டிசம்பர்23 முதல் ஜனவரி 23 வரை நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் நேரடியாக கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார்.

முதல்வர் பழனிசாமி யின் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் போடிநாயக்கனூர் மற்றும் அமைச்சர்களின் தொகுதி களில் நடைபெற்ற மக்கள் கிராம, வார்டு சபைக் கூட்டங்களில் ஸ்டாலின் பங்கேற்றார்.

மக்கள் கிராம, சபைக் கூட்டங்களில் பங்கேற்ற ஸ்டாலின், அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்யவிருக்கிறார். அதற்கான பயணத் திட்டத்தை இன்று அறிவிக்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் இன்று காலை 11 மணிக்கு பிரச்சாரப் பயணத் திட்டத்தை ஸ்டாலின் அறிவிக்க இருப்பதாக திமுகவினர் தெரிவித்தனர்.

தேர்தல் தேதி அறிவிப்புக்கு ஒரு மாதம் முன்பே தேசிய, தமிழக தலைவர்கள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதால் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x