Published : 24 Jan 2021 03:17 AM
Last Updated : 24 Jan 2021 03:17 AM

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்கள் பாதுகாப்புக்காக தனி நீதிமன்றம்: திருத்தணி தொகுதி மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்கள் பாதுகாப்புக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தனி நீதிமன்றம்’ அமைக்கப்படும் என, திருத்தணி தொகுதியில் நேற்று காலையில் நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட அம்மையார்குப்பம் ஊராட்சியில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில், ’அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்ற தலைப்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நேற்று காலையில் நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:

தமிழகத்தில் இன்னும் 4 மாதங்களில் ஆட்சி மாற்றம் வந்தவுடன், ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்துக்கு காரணமானவர்கள் கண்டு பிடிக்கப்பட்டு, நாட்டு மக்கள் முன்பு நிறுத்தப்படுவார்கள்.

பொதுமக்களின் வரிப்பணத்தில் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு தங்கள் கட்சிக்கு விளம்பரம் கொடுக்கிறது அதிமுக அரசு. ஆனால், புயல் நிவாரண நிதி கேட்டால், நிதி இல்லை என்கிறார்கள். இதனால் விவசாயிகள் செத்து மடிகிறார்கள்.

அதிமுக ஆட்சியில் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் எந்த வசதிகளும் இல்லாத நிலையில் தொடங்கப்பட்டுள்ள மினி கிளினிக்குகளுக்கு எப்படி பணியாளர்கள் நியமிக்கப் படுகிறார்கள் என ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குப் போட்டிருக்கிறார். அந்த வழக்கு விசாரணையில், அரசு வழக்கறிஞர், ’இது தற்காலிக கிளினிக் தான். அதனால் நியமனம் தேவையில்லை’ என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.இதன் மூலம், ’மினி கிளினிக் திட்டம்’ என்று கூறி பொதுமக்களை அதிமுக அரசு ஏமாற்றிக் கொண்டிருப்பது தெரிகிறது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்கள் பாதுகாப்புக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தனி நீதிமன்றம் அமைத்து, பாலி யல் குற்றங்கள் தொடர்பாக உடனடியாக விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வழிவகை செய்வோம்

திருத்தணி தொகுதியில் ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும் என்ற அதிமுகவின் வாக்குறுதி 10 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், திருத்தணி தொகுதியில் ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும்.

தமிழகத்தில் நடந்துள்ள மக்கள் கிராமசபைக் கூட்டங்களில் இதுவரை ஒன்றே கால் கோடி பேர், கையெழுத்துப்போட்டு அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x